2032-ல் இந்தியா உற்பத்தி துறையில் முதலிடம் பெறும்

இந்தியா 2032-37-ம் ஆண்டுக்குள் உற்பத்தித்துறையில் சர்வதேச நாடுகளுக்கிடையில் முதலிடம் பெறும் என விமான உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான சேலம் ஏரோ பார்க் நிறுவனத்தின் நிறுவனரும், மேலாண்மை இயக்குனருமான ஆர்.சுந்தரம் குறிப்பிட்டார்.

ராசிபுரம் ஜேசிஐ - ஜேகாம் அமைப்பின் 2024-ம் ஆண்டின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா ராசிபுரத்தில் நடந்தது. ஜேசிஐ-ஜேகாம் அமைப்பின் தலைவர் பி.பூபதி தலைமையில் நடைபெற்ற விழாவில், ஏரோ பார்க் நிறுவனர் ஆர்.சுந்தரம் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று விழாவில் மேலும் பேசியது:

எந்த தொழிலானாலும் நம் இலக்கு எண்ண என அறிந்து கொண்டு அதை நோக்கி செயல்பாடுகள் இருக்க வேண்டும். எதிலும் போட்டிகளற்ற தொழிலை தேர்வு செய்வது வெற்றிக்கு வழிவகுக்கும். தற்போது மத்திய அரசு மேக் இந்தியா, ஆத்ம பாரத் என நிறைய திட்டங்கள் கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம் கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் உற்பத்தி துறையில் 7-வது இடத்தில் இருந்து இந்தியா தற்போது 3-வது நாடாக உள்ளது.

2032 ஆண்டில் இந்தியா முதலிடத்திற்கு வரும். பெரிய பெரிய விமானங்களுக்கு தேவையான உதிரி பாகங்களை ஐரோப்பா நாடுகளை நம்பியிருந்த நாம் தற்போது இதனை நாமே தயாரிக்க முடிகிறது. சீனாவை நம்பியிருந்த பல நாடுகள் தற்போது இந்தியா நோக்கி வருகின்றன. இதற்கு இந்திய நாட்டின் மீது சர்வதேச நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நம்பகத்தன்மையே காரணம். அறிவுசார் சமுதாயமாக இந்தியா மாறியுள்ளது என பிற நாடுகள் நம்புகின்றனர்.

கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா வளர்ச்சி சார்ந்து, உற்பத்தி சார்ந்து வாய்ப்புகள் உருவாகியுள்ளது. உற்பத்தி என்பது பெரிய கலை அதில் அனைவரும் பங்கெடுக்க வேண்டும். நவீனத் தொழில்நுட்பம் குறித்து புரிந்து கொள்ள வேண்டும். தொடர்புகளை விரிவாக்கக்கொண்டு நுட்பத்துடன் தொழிலை கொண்டு செல்ல வேண்டும். மத்திய அரசு தொழில்த்துறை வளர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் தமிழகத்தில் டிபன்ஸ் காரிடர் என கொண்டு வந்துள்ளனர்.

இதன் மதிப்பு என்பது 5 லட்சம் கோடி. இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 1.50 லட்சம் கோடிக்கு வர்த்தம் செய்ய முடியும். பாதுகாப்புத்துறைக்கு இதன் மூலம் பலவற்றை உற்பத்தி செய்து வழங்க முடியும். நமது பகுதி துணி உற்பத்திக்கு அதிக அளவு உள்ளதால் பாதுகாப்புத்துறைக்கு தேவையான கவச உடைகளை இதன் மூலம் உற்பத்தி செய்து வழங்க முடியும். தற்போது பிற நாடுகளில் இருந்து நாம் இறக்குமதி செய்வதை தவிர்த்து உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய வேண்டும் என்பது தான மத்திய அரசின் நோக்கம். வளரும் நாடுகளுக்கு மட்டுமின்றி அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளுக்கும் நாம் இனி ஏற்றுமதி செய்ய முடியும்.

இதனால் இந்திய நாட்டை அடுத்த கட்டத்துக்கு கொண்டு் செல்ல முடியும் என்றார்.மேலும், தமிழக அரசும் மாநிலத்தில் பின் தங்கிய மாவட்டம் என்பதே இருக்கக்கூடாது என்ற இலக்கில் செயல்பட்டு வருகிறது. இதனை நாம் ஒவ்வொருவரும் முன்னெடுத்து நாட்டை மாற்ற வேண்டும். இதற்கு நம் ஒவ்வொருவரிடமும் முதலில் மாற்றம் வேண்டும். நல்லதை செய்வதன் மூலம் சர்வதேச நாடுகள் நம்மை திரும்பிபார்க்கும் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்றார்.

இதில் ஜேடிஐ அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நிலாமணி கணேசன், ஜேகாம் மண்டலத் தலைவர் என்.செல்வகுமார், ஜேசிஐ அமைப்பின் நிறுவனத் தலைவர் டி.சசிரேகா, பயிற்சியாளர் எம்.தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்து புதிய நிர்வாகிகளுக்கு பொறுப்பேற்க வைத்துப் பேசினார். விழாவில் எல்லோ எஜூசாப்ட் என்ற செயலியை சிறப்பு விருந்தினர் அறிமுகம் செய்து வைத்தார். தமிழக மக்கள் தன்னுரிமை கட்சி நிறுவனர் நல்வினைசெல்வன், ராசிபுரம் நகர வளர்ச்சி மன்றத் தலைவர் வி.பாலு ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தனர். முன்னதாக விழாவில் ஜேசிஐ-ஜேகாம் அமைப்பின் நிர்வாகிகளாக பொறுப்பேற்றுக்கொண்டோர் விவரம்: தலைவர் பி.பூபதி, துணைத் தலைவர் கே.கார்த்திக், செயலர் டி.மோகன்குமார், பொருளாளர் எம்.வி.சதீஸ்குமார், இயக்குனர்கள் எஸ்.செளந்தர்யா, கே.ஆர்.பிரபுராம். உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story