சிவகங்கையில் ரூ.77.16 கோடியில் புறவழி சாலை - அமைச்சர் துவக்கி வைப்பு
சாலை பணியை துவக்கி வைத்த அமைச்சர்
சிவகங்கையில் ரூ.77.16 கோடி மதிப்பில் 10.6 கி.மீ., துாரத்திற்கு புறவழிச்சாலை (பைபாஸ் ரோடு) அமைக்கும் பணியை அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். சிவகங்கையில் இருந்து காஞ்சிரங்கால் அருகே வஸ்தாபட்டி ரோட்டில் துவங்கி சூரக்குளம், பனங்காடி, வந்தவாசி, புதுப்பட்டி வழியாக இளையான்குடி ரோடு கல்குளம் பிரிவு வரை 10.6 கி.மீ., துாரத்திற்கு முதற்கட்டமாக புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்கு அடுத்த கட்டமாக கல்குளம் பிரிவில் இருந்து தஞ்சாவூர் மானாமதுரை பைபாஸ் ரோட்டில் சாமியார்பட்டி விலக்கு வரை இரண்டாம் கட்டமாக புறவழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத் துறை திட்டமிட்டுள்ளது. நில எடுப்பில் பிரச்னை, உரிமையாளருக்கு நிலத்திற்கான இழப்பீடு வழங்குவதில் இழுபறி என பல ஆண்டாக இப்பணி கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் முதற்கட்டமாக வஸ்தாபட்டி ரோட்டில் இருந்து கல்குளம் பிரிவு வரை ரூ.77.16 கோடி மதிப்பீட்டில் புறவழிச்சாலை அமைப்பதற்கான பணியை அமைச்சர் துவக்கி வைத்தார். விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் ஜவஹர் முத்துராஜ், கோட்ட பொறியாளர் பிரசன்னா வெங்கடேஷ், உதவி பொறியாளர் சையது ஆகியோர் பங்கேற்றனர்.
Next Story