போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புறவழிச்சாலை - பா.ம.க

பாமக செயற்குழு கூட்டம்
சேலம் மாநகர் மாவட்ட பா.ம.க. செயற்குழு கூட்டம் சேலத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் அருள் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து பேசினார். மாவட்ட தலைவர் கதிர்.ராசரத்தினம், சேலம் நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர் குணசேகரன், பசுமை தாயகம் மாநில இணை செயலாளர் சத்ரியசேகர், தேர்தல் பணிக்குழு செயலாளர் சதாசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் வருகிற 17-ந் தேதி நடைபெறும் வாக்குச்சாவடி களப்பணியாளர்களுடன் பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்துரையாடும் கூட்டத்திற்கு வாக்குச்சாவடி அளவில் அனைவரும் திரளாக கலந்து கொள்ள வேண்டும். சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண நிதியை உடனடியாக வழங்க வேண்டும். ஓமலூரில் இருந்து சீலநாயக்கன்பட்டி வரை போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் அதனை தவிர்க்க சேலத்தில் புறவழிச்சாலை (ரிங் ரோடு) அமைக்க வேண்டும். சேலம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலை எதிர்கொள்ள மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஊராட்சி, பேரூராட்சி, மாநகராட்சி கோட்டங்களில் அனைத்து வாக்குச்சாவடி களப்பணியாளர்களை நியமனம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாவட்ட துணைச்செயலாளர் மாணிக்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் விஜயகுமார், செவ்வாய்பேட்டை பகுதி நந்தகுமார், மாதேஷ், சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
