குமரி கடலில் கண்ணாடி பாலத்துக்கான  கூண்டு தயார்

குமரி கடலில் கண்ணாடி பாலத்துக்கான  கூண்டு தயார்

ஆர்ச் அமைக்கும் பணி

கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே கண்ணாடி பாலம் அமைப்பதற்கான கூண்டு தயாரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளது.

சர்வதேச சுற்றுலாதலமான கன்னியாகுமரியில் கடல் நடுவே உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே பாலம் அமைக்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. தமிழ்நாடு அரசின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறையின் தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் வைப்பு நிதியாக ரூ. 37 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கின. இந்த கண்ணாடி கூண்டு பாலம் 97 மீட்டர் நீளமும், 4 மீட்டர் அகலமும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

முதற்கட்டமாக திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் நினைவு பாறையின் பக்கத்தில் அடித்தள கம்பிகள் பொருத்தப்பட்டு தூண்கள் அமைக்கப்பட்டன. அதன் பின்னர் ஆர்ச் பீம்கள், குறுக்கே அமைக்கப்படும் பீம்கள், நீள பீம்கள் மற்றும் டை பீம்கள் ஆகியவற்றை கட்டமைக்கும் பணிகள் பாண்டிச்சேரியில் தனியார் கம்பெனியில் வடிவமைக்கப்பட்டன. இந்த கட்டமைத்தல் பணிகள் நிறைவடைந்து உள்ளன.

இருபுறமும் அமைந்திருக்கும் தூண்கள் மீது இந்த ஆர்ச்கள் பொருத்தப்படும். இந்த ஆர்ச் எடை 222 டன். துருப்பிடிக்காத வகையில் ஸ்டீல்ஸ் கம்பிகள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் 101 துண்டுகளாக இவை தயாரிக்கப்பட்டு இணைத்து காண்பிக்கப்பட்டது. பின்னர் இவை தனித்தனியாக பிரிக்கப்பட்டு, வர்ணம் பூசும் பணிகள் முடிந்ததும் கன்னியாகுமரிக்கு வந்து சேரும். பின்னர் தொழில்நுட்ப வல்லுநர் குழு முன்னிலையில் இந்த 101 துண்டுகளும் இணைக்கப்பட்டு ஆர்ச் அமைக்கப்படும். ஜூன் மாதத்துக்குள் ஆர்ச் பணிகள் முடிந்து விடும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Tags

Next Story