பேக்கரிகளில் கேக் தயாரிப்பு பணி தீவிரம்
பேக்கரி
கிறிஸ்துமஸ் ஆங்கில புத்தாண்டு என்றாலே விதவிதமான கேக் வகைகள் தான் நமது நினைவுக்கு வரும். மேலும் கிறிஸ்துமஸ் பண்டிகையை காட்டிலும் ,ஆங்கில புத்தாண்டு நாளில் அதிகளவு கேக்குகளை வாங்கி ஆங்கில புத்தாண்டை நடு இரவில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி இன்றைய இளம் தலைமுறை இளைஞர்கள் இளைஞிகள் உற்சாகமாக கொண்டாடுவதை ஒரு டிரண்டாகவே கருதுகின்றனர்.
2024 ஆண்டு ஆங்கில புத்தாண்டை வரவேற்க இளைஞர் இளைஞிகள் பட்டாளம் தற்போது தயாராகி வருகிறது.அவர்களை மகிழ்விக்கும் வகையிலும், அவர்களை விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையிலும் ,பள்ளிபாளையத்தில் உள்ள பேக்கரிகளில், விதவிதமான எண்ணற்ற டிசைன்களில், ஆங்கில புத்தாண்டுக்கென பிரத்தியோகமான கேக்குகள் தயார் செய்யப்பட்டு வருகிறது . இது குறித்து பள்ளிபாளையம் சங்ககிரி சாலையில் பேக்கரி மற்றும் கேக்குகள் தயாரிக்கும் சிறு தொழில் நடத்தி வரும் சிவம் என்பவர் கூறும் பொழுது, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஆங்கில புத்தாண்டு நாட்களில், பொதுமக்கள் நாங்கள் டிசைன் செய்து வைத்துள்ள கேக் வகைகளை வாங்கிச் செல்வார்கள்.
ஆனால் தற்போது என்னதான் நாங்கள் பல்வேறு டிசைன்களில் கேக்குகளை தயார் செய்து வைத்திருந்தாலும், தற்போது கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவர்கள் எண்ணத்திற்கு ஏற்ப,தங்கள் அன்புக்குரியவர்களை மகிழ்விக்க, அவர்கள் எண்ணத்திற்கு ஏற்றார் போல், புதிய வகையான டிசைன்களில் அரை கிலோ முதல் 5 கிலோ வரையிலான கேக்குகளை ஆர்டர் கொடுக்கிறார்கள்.. நாங்களும் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப உடனுக்குடன் கேக்குகளை தயார் செய்து கொடுத்து வருகிறோம். முன்பை காட்டிலும் தற்போது பல்வேறு மூலப் பொருட்களின் விலை ஏற்றத்தின் காரணமாக இந்த ஆண்டு விற்பனை செய்யப்படும் கேக்குகளில் கணிசமான அளவு விலை உயர்த்தி தர வேண்டிய நிலையில் உள்ளோம் .
வருடம் முழுவதும் கேக் தயாரிப்பு பணியில் நாங்கள் ஈடுபட்டாலும், வருடத்தின் கடைசி இரண்டு நாட்கள் மற்றும் வருடத்தின் முதல் துவக்க நாளில் மட்டுமே அதிகளவு கேக்குகள் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒன்றாகும் . அதே நேரத்தில் ஆங்கில புத்தாண்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம் தமிழ் புத்தாண்டுக்கு இல்லை எனும் பொழுது மனதில் ஓரத்தில் சிறு கவலை இருந்தாலும் எதிர்வரும் காலங்களில் அனைத்தும் சரியாகும் என்ற நம்பிக்கையுடனே தொழிலை கவனித்து வருவதாக தெரிவித்தார். சாதாரணமாக ஒரு கிலோ கேக் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையிலும், பிளாக் பாரஸ்ட் போன்ற உயர்தர கேக்குகள் கூடுதல் விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது .