கிசான் நிதி உதவி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெற அழைப்பு
பிரதம மந்திரியின் கிசான் நிதி உதவி திட்டத்தில் விவசாயிகள் பயன்பெறுமாறு தர்மபுரி வேளாண் உதவி இயக்குனர் அழைப்பு விடுத்துள்ளார்.
தர்மபுரி வட்டார வேளாண் உதவி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிவாய்ந்த பயனாளிகள் மற்றும் இந்த திட்டத்தில் நிதிஉதவி பெறுவதற்கு தகுதியற்றவர்கள் குறித்த வழிகாட்டுதல்கள் வெளி யிடப்பட்டுள்ளன.
அதன் அடிப்படையில் அதிக வருவாய் பெறும் விவசாயிகள், இந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட தொழில் வல்லுனர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரிபவர்கள் இந்ததிட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இயலாது. மாதம் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள், வருமான வரி செலுத்துபவர்கள் இந்த திட்டத்தில் நிதிஉதவி பெற தகுதி இல்லாத நபர்கள் ஆவர்.
ஒரு குடும்ப அட்டையில் ஒரு நபருக்கு மேல் பயனடைந்தவர்கள், தானாக முன்வந்து இந்த திட்டத்தில் இருந்து விலகி கொள்பவர்கள், விவசாய நில உரிமையின் அடிப்படையில் கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு பிறகு நில உரிமை பெற்றவர்கள் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. இதேபோல் பதிவு செய்த நபரின் பெயரில் நிலம் இல்லாத விவசாயிகள், விவசாயமில்லாத நில பயன்பாடு உள்ள பதிவுகள், நிறுவனங்களின் பெயரில் உள்ள நில உரிமையாளர்கள், முறை யற்ற கிசான் பதிவு, போலியான ஆதார் எண் கொண்ட பதிவு, வேறு இடத்திற்கு குடி பெயர்ந்தவர்கள், விவசாய பங்குதாரர் மற்றும் குத்தகை விவசாயிகள், தமிழ்நாட்டை சேராதவர்கள் ஆகியோரும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியற்றவர்கள் ஆவர்.
எனவே பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகள் மட்டுமே பதிவு செய்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.