துப்பாக்கி சூட்டில் உயிர் நீத்த தமிழக விவசாயிகளுக்கு வீர வணக்கம் செலுத்த அழைப்பு
ஆர். வேலுசாமி
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஆர் . வேலுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தில் கடந்த 1970 முதல் 1980 கடுமையான வறட்சி நிலவியது, அப்போது தமிழக விவசாயிகள் வேளாண் பணிகளை தொடங்குவதற்கு நிதி கையிருப்பு இல்லாமல் தவித்தனர். பல சிரமங்களுக்கு இடையிலும் வேளாண் உற்பத்தியை பெருக்க வேண்டும் என்று பாடுபட்டுக் கொண்டிருந்த நிலையில், அப்போதைய தமிழ்நாடு அரசு மூலம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் பயிர் கடன் மற்றும் பண்ணை அபிவிருத்தி கடன் பெற்று, கிணற்று பாசனத்தை நம்பி விவசாயிகள் பயிர் செய்துவந்தனர்.
கிணறு பாசனத்தை நம்பி பயிர் செய்யும் விவசாயிகள், தமிழ்நாடு அரசு மின்சார வாரியம் மூலம், கிணற்று மோட்டாருக்கு மின் இணைப்பு பெற்று, பயிர் செய்தனர், அவ்வாறு அவர்கள் பயன்படுத்திய மின்சாரத்திற்கு அதிக கட்டணம் மின் வாரியத்தால் வசூலிக்கப்பட்டு வந்தது. இயற்கை சீற்றம் மற்றும் பருவம் தவறிய மழை பொழிவின் காரணமாக விளைச்சல் இல்லாததால் விவசாயிகளால் மின்சார கட்டணத்தை கட்டமுடியாதா நிலையில் மின்சார வாரியம் விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி கொடுத்து வந்தது. ஒரு புறம் கடுமையான வறட்சி நிலவிய நிலையில், தமிழக விவசாயிகள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் வாங்கிய பயிர் கடன் மற்றும் பண்ணை சாராத கடனை திருப்பி செலுத்த இயலவில்லை.
கடனை திருப்பி செலுத்தாவிட்டால் ஜப்தி என்ற சட்டத்தின் படி, விவசாயிகள் வீட்டில் உள்ள பொருட்களை ஜப்தி செய்து நடவடிக்கை எடுக்க தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் முயற்சித்தினர். தமிழக விவசாயிகள் படும் இன்னல்களை கருத்தில் கொண்டு சிதறிய நெல்லிக்காய் மூட்டையாக கிடந்த தமிழக விவசாயிகளை, கடன் தொல்லை, மின்சார கட்டணம் உயர்வு போன்ற துயரங்களில் இருந்து காப்பாற்றுவதற்காக, தமிழக விவசாயிகள் சங்க தலைவர், மறைந்த உழவர் பெருந்தலைவர் C . நாராயணசாமி நாயுடு தலைமையில் 1970 முதல் 1980 வரை தமிழகம் தழுவிய அளவில் விவசாயிகள் சங்கம் சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது.
10 ஆண்டுகள் நடந்த போராட்டத்தில், தமிழ்நாடு அரசு காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில், துப்பாக்கி குண்டுக்கு இறையாகி 53 விவசாயிகளும் இறந்துள்ளனர். கிணற்று மோட்டாருக்கு தமிழக அரசு யூனிட்டுக்கு பழைய கட்டணத்தில் இருந்து ஒரு பைசா உயர்த்தியதன் காரணமாக தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஒரு பைசா உயர்வில் இருந்து அரை பைசாவாக குறைக்க கோரி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து மிகப்பெரிய போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது .05.07.1972 ல் இந்த முதல் போராட்டத்தில் சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயகன்பாளையம் பகுதியை சார்ந்த 9 விவசாயிகள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கி சுடு நடத்தியதில் விவசாயிகள் உயிரிழந்தனர், இது போல் பல தினங்களில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம், தமிழகம் முழுவதும் நடைபெற்றதில் வேடச்சந்தூர்,பெருமாநல்லூர், கோயில்பட்டி, குறிஞ்சாங்குளம் ஆகிய பகுதிகளில் 53 தமிழக விவசாயிகள் மீது தமிழ்நாடு அரசு காவல்துறை துப்பாக்கி சுடு நடத்தி, விவசாயிகளை கொன்று குவித்தது.
தமிழக அரசு தமிழகத்தில் முதல் துப்பாக்கி சுடு நடத்திய நாளான 05.07.1972 மறைந்த தியாகிகளுக்கு ஆண்டு தோறும் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் வீர வணக்க நாளாக கடைபிடித்து வருகிறோம். தமிழக விவசாயிகள் கிணறு மோட்டார் மூலம் பாசனம் செய்ய இலவச மின்சாரம் கிடைக்க வழிவகை உருவாக்கி கொடுத்தது, துப்பாக்கி சுடு மூலம் இறந்த தீயாகிகள் மூலம் தான் இலவச மின்சாரம் கிடைக்க பெற்றது என்று இன்றைய தலைமுறை விவசாயிகள் கருத்தில் கொள்ளவேண்டும். தமிழக விவசாயிகளுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்த வருகின்ற வெள்ளிக்கிழமை 05.07.2024 காலை 10 மணிக்கு சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் பெத்தநாயகன்பாளையம் பேரூராட்சி அலுவலகம் அருகே உள்ள ஸ்தூபி பகுதிக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் வருகை தந்து அனைத்து விவசாயிகளும் பேரணியாக சென்று துப்பாக்கி சூட்டில் பலியான தியாகிகள் அனைவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்த நினைவிடத்தில் வீர வணக்கம் செலுத்த வருகை தரும் படி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.