மரம் செடி கொடிகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்களுக்கு அழைப்பு

மரம் செடி கொடிகளை பாதுகாக்க சமூக ஆர்வலர்களுக்கு அழைப்பு

மரங்களை பாதுகாக்க அழைப்பு 

கோடை வெயிலின் தாக்கத்தில் நீரின்றி 1000க்கும் மேற்பட்ட செடிகள், மூலிகை மரங்களை பராமரிப்பதற்கு சமூக ஆர்வலர்கள் முன் வர வேண்டும் என சவுதாபுரம் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டம்,பள்ளிபாளையம் ஒன்றியம்,சவுதாபுரம் ஊராட்சியில் ஏராளமான கிராமப்புற பகுதிகள் அமைந்துள்ளது. அம்மன் நகர், செட்டியார் கடை, மக்கிரி பாளையம், மேட்டுக்காடு ,முரளி காடு ,கொல்லப்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் மியா வாக்கி திட்டத்தில், சாலையின் இருபுறமும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மூலிகைச் செடிகள் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிப்பு செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில் கோடை வெயில் அதிகரித்த நிலையில், போதிய நீர் ஊற்ற முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டப் பணிகளும் திடீரென நிறுத்தப்பட்டதால்,தொழிலாளர்கள் வராததால் செடிகள், மரக்கன்றுகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இதனை அடுத்து ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் டிராக்டர்கள் மூலமாக தண்ணீர் கொண்டு வரப்பட்டு செடிகொடிகளுக்கு நீர் ஊற்றப்பட்டு வருகிறது . இது குறித்து சவுதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நந்தகோபால் கூறும் பொழுது கோடை வெயில் தாக்கத்தின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட செடி கொடிகள் போதிய நீர் இல்லாததால் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. ஊராட்சி மன்றத்தின் சார்பிலும், சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் தினம்தோறும் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 3 ஆயிரம் ரூபாய் செலவினம் என்ற அடிப்படையில் தண்ணீரை டிராக்டரில் விலை கொடுத்து வாங்கி, ஆட்களை கொண்டு செடி, கொடிகளை பராமரிப்பு செய்து வருகிறோம். தொடர்ந்து இன்னும் ஒரு மாதத்திற்கு மேலாக முழுமையாக கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலை இருப்பதால், சமூக ஆர்வலர்கள் தன்னார்வ அமைப்பினர், இயற்கையின் மீது ஆர்வம் கொண்டவர்கள் தாங்களாகவே முன்வந்து, போதிய நீரின்றி வாடும் செடிகளுக்கு தினம் தோறும் நீரூற்றும் வகையில் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளார்..கொளுத்தும் கோடை வெயில் காரணமாக வழக்கமாக செய்யப்பட்டு வரும் விவசாய பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story