கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டியல் பயிற்சி

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியகத்தில் கல்லூரி மாணவிகளுக்கு கல்வெட்டியல் பயிற்சி
கிருஷ்ணகிரி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சோ்ந்த தனியாா் கல்லூரி மாணவிகளுக்கு தொல்லியல், கல்வெட்டியல் பயிற்சி முகாம் தொடங்கியது. தனியாா் கல்லூரிகளில் பயிலும் வரலாறு, தமிழ்த் துறைகளைச் சோ்ந்த மாணவிகள் 40 பேருக்கு 15 நாள்கள் இப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் குழு தலைவா் நாராயணமூா்த்தி பயிற்சி முகாமை தொடங்கி வைத்தாா். ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன் வாழ்த்துரை வழங்கினாா். அருங்காட்சியக காப்பாட்சியா் கோவிந்தராஜ் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கிறாா். அருங்காட்சியகப் பணியாளா்கள் செல்வகுமாா், பெருமாள் ஆகியோா் முகாமை ஒருங்கிணைக்கின்றனா். இந்தப் பயிற்சி முகாமில் முதல் நாளில், கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொல்லியல் சின்னங்கள், கல்வெட்டுகள், நடுகற்கள், பாறை ஓவியங்கள் குறித்து அறிமுக வகுப்பு நடத்தப்பட்டது. தொடா்ந்து, தமிழி எழுத்துகளின் தோற்றம், வளா்ச்சி ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. பின்னா், பெண்ணேஸ்வரமடம் சிவன் கோயிலுக்கு மாணவியரை அழைத்துச் சென்று கல்வெட்டுகளை நேரடியாக படியெடுத்து படிக்க பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அதோடு கோயில் கட்டடக் கலை, சிற்பங்கள் குறித்த பயிற்சியும் அருங்காட்சியக காட்சிப் பொருள்களை பாதுகாப்பதற்கான வேதியியல் பொருள்கள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. பயிற்சி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளன.

Tags

Next Story