திருவிடந்தை பகுதியில் வாகனங்களை கண்காணிக்க கேமராக்கள் அமைப்பு

திருவிடந்தை பகுதியில் வாகனங்களை கண்காணிக்க கேமராக்கள் அமைப்பு
வாகனங்களை கண்காணிக்க கேமராக்கள் அமைப்பு
திருவிடந்தை பகுதியில் வாகனங்களை கண்காணிக்க கேமராக்கள் அமைக்கப்பட்டு வருகிறது.

சென்னை - மாமல்லபுரம் இடையிலான கிழக்கு கடற்கரை சாலையில், செங்கல்பட்டு காவல் மாவட்ட எல்லை, திருவிடந்தை பகுதியில் துவங்குகிறது. இதையடுத்து, இத்தடத்தில் செல்லும் வாகனங்களை கண்காணித்து, சந்தேகத்திற்குரிய வாகனங்களில் சோதனை நடத்த, ஓராண்டிற்கு முன், திருவிடந்தையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டது.

நித்ய கல்யாண பெருமாள் கோவில் அருகில், மாமல்லபுரம் தடத்தில் செல்லும் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தவும், அவசியம் ஏற்படின் வாகனத்தை நிறுத்தவும், சாலை தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி., கட்டுப்பாட்டில், எஸ்.ஐ., போலீசார், 24 மணி நேரமும் இங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஓட்டுனர், உரிமம் பெற்றுள்ளாரா, மது அருந்தியுள்ளாரா, வாகன ஆவணம் உள்ளதா என்றும் பரிசோதிக்கப்படுகிறது. இத்தகைய சோதனை சாவடியில், கடந்த ஓராண்டாக சிசிடிவி' இல்லை. கிழக்கு கடற்கரை சாலையில்,

சென்னை அக்கரை துவங்கி மாமல்லபுரம் வரை, போலீசார், சிசிடிவி' கேமிராக்களை முன்பு அமைத்திருந்தனர். நாளடைவில் கேமராக்கள் பழுதாகின. அதன்பின் மீண்டும் அமைக்கப்படவில்லை. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு நிறுவனம், போக்குவரத்து கண்காணிப்பிற்காக, சில இடங்களில் அமைத்துள்ள சிசிடிவி கேமராக்கள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

இந்நிலையில், திருவிடந்தை சோதனை சாவடி பகுதியில் கடக்கும் வாகனங்களை கண்காணிக்க, நான்கு சுழல் கேமிராக்கள், தற்போது அமைக்கப்பட்டுள்ளன. மாமல்லபுரம், சென்னை ஆகிய இரண்டு தடங்களில் செல்லும் வாகனங்களை, அவற்றின் வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருவதாக, போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story