நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது - அரசியல் கட்சியினருக்கு கட்டுப்பாடுகள்

நாளை மாலை பிரசாரம் ஓய்கிறது - அரசியல் கட்சியினருக்கு கட்டுப்பாடுகள்

மாவட்ட தேர்தல் அதிகாரி பிருந்தாதேவி

நாளை மாலை பிரசாரம் ஓய்வதால், அரசியல் கட்சியினர் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.

மாவட்ட தேர்தல் அதிகாரி பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தேர்தல் பிரசாரம் ஓய்கிறது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரங்களை, வாக்குப்பதிவுக்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாக முடித்துக்கொள்ள வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.

அதனடிப்படையில், நாளை (புதன்கிழமை) மாலை 6 மணிக்கு தேர்தல் பிரசாரம் ஓய்கிறது. எனவே அரசியல் கட்சியினர் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது. தேர்தல் தொடர்பான பிரசாரங்கள், ஒலிபெருக்கி பயன்பாடுகள் ஆகியவற்றுக்கும் வாகனங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், அந்தந்த தொகுதி வாக்காளர்களை தவிர வெளி ஆட்கள் யாரும் தொகுதிக்குள் இருக்கக் கூடாது. திருமண மண்டபங்கள், தனியார் தங்கும் விடுதிகளில் வெளி ஆட்களை தங்க வைக்கக்கூடாது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளை கண்காணிக்க அனைத்து பகுதிகளிலும் 24 மணி நேரமும் பறக்கும் படை சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வாக்குக்கு பணம், பொருட்கள் கொடுப்பதும், வாங்குவதும் தண்டனைக்குரிய குற்றம் ஆகும். இது குறித்து அரசியல் கட்சியினருக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. தேர்தலை அமைதியான முறையில் நடத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. வாக்காளர்கள் அனைவரும், வாக்கு செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

Tags

Next Story