பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா? - செல்வப்பெருந்தகை

பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா? - செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை 

"ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் மத்திய பாஜக அரசு பாரபட்சமாக செயல்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்." என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ இன்று ரயில்வே துறையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. ரயில் விபத்து தொடர் கதையாக நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதை ஏன் கட்டுப்படுத்த முடியவில்லை? மோடி அரசு இதில் ஏன் கவனம் செலுத்தவில்லை? இந்த கேள்வியை காங்கிரஸ் கட்சி இல்லாமல் அனைத்து கட்சிகளும் கேட்கிறது. , ரயில்வே பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதியை பாதுகாப்பு பணிகளில் செயல்படுத்தாமல், அதிகாரிகள் பங்களா கட்டிக் கொள்கிறார்கள் என்று இந்தாண்டு சிஏஜி அறிக்கை கூறுகிறது.

10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை அதிமுக எதற்காக கொடுத்தது? எதற்காக பாமக பெற்றுக் கொண்டார்கள். சமூக நீதிக்காக ஆரம்பிக்கப்பட்டது பாமக. இன்று சமூக நீதிக்காக செயல்படுகிறதா? ஒரு சாமானியனாக நான் கேட்கிறேன். பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள பாமக சமூக நீதியை பற்றி பேசலாமா?

ரயில்வே துறைக்கென தனி பட்ஜெட் ரத்து செய்யப்பட்டு பொது படஜெட்டோடு இணைக்கப்பட்டு தற்போது ரூ.2.65 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது என்கிற விபரம் தான் வெளிவந்தது. எதற்கு எவ்வளவு நிதி என்கிற விபரங்கள் தற்போது தான் வெளிவந்துள்ளது.

அதன்மூலம், தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.6,362 கோடி ஒதுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மொத்த ஒதுக்கீட்டில் 3.49 சதவீதமாகும். ஆனால் மத்திய பிரதேசத்திற்கு ரூ.14,738 கோடியும் (8.08%), குஜராத்துக்கு ரூ. 8,743 கோடி (4.79%) உத்திர பிரதேசம் ரூ. 19,848 கோடி (10.88%), ராஜஸ்தான் ரூ.9,959 கோடி (5.46%), மகாராஷ்டிரா அதிகபட்சமாக ரூ.15,940 கோடி (8.74%) பிஹார் ரூ. 10,033 கோடி (5.50%) ஆந்திரா ரூ.9,151 கோடி (5.05%) என ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் மத்திய பாஜக அரசு பாரபட்சமாக செயல்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

கடந்த 10 ஆண்டுகால மக்கள் விரோத நடவடிக்கையின் காரணமாகவும், பாசிச போக்கினாலும் பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் மக்கள் பாடத்தை புகட்டியிருக்கிறார்கள். இரு மாநில கட்சிகளின் ஆதரவோடு மைனாரிட்டி அரசு நடத்திவரும் பிரதமர் மோடி தொடர்ந்து மக்களை அரசியல் ரீதியாக பிளவுபடுத்தி பாரபட்சமாக நிதி ஒதுக்கீடு செய்வாரேயானால் அதற்குரிய பாடத்தை மக்கள் நிச்சயம் மீண்டும் புகட்டுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story