கால்வாய் சீரமைக்கும் பணி

தென்காசி மாவட்டத்தில் இராமநதி- ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்டம் உருவாக்கப் பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் அன்றைய முதல்வர் ஜெயலலிதாவால் ரூ. 41. 8 கோடி மதிப்பீட்டில் திட்டம் தயாரிக்கப்பட்டு 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. இதற்கான பணி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய நிலையில், வனத்துறை அனுமதி பெறவில்லை எனக்கூறி அப்பணியானது நிறுத்தப்பட்டது.
2021ம்ஆண்டு திமுக ஆட்சி அமைந்த பிறகு முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ. சிவபத்மநாதன் மற்றும் இராமநதி ஜம்புநதி இணைப்பு கால்வாய் திட்ட அமைப்பாளரும், தென்காசி தெற்கு மாவட்ட மதிமுக செயலாளருமான இராம. உதயசூரியன் மற்றும் பல்வேறு தரப்பினர் தமிழக முதல்வர், வனத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து இத்திட்டத்தின் அவசியத்தை எடுத்துக்கூறி பணிகளை தொடங்கிட நடவடிக்கை எடுக்கும் படி கோரிக்கை விடுத்தனர்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் தமிழ்நாடு வன உயிரின பாதுகாப்பு கூட்டத்தில் இத்திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு, பின்னர் மத்திய அரசின் கீழ் இயங்குகிற வன உயிரின பாதுகாப்பு கூட்டத்தில் அனுமதி பெறப்பட்டது. அத்துடன் இத்திட்டத்திற்கு கூடுதலாக ரூ. 21 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது மாவட்ட ஆட்சியரின் ஒப்புதலோடு பணி தொடங்கியுள்ளது. கடந்த 10 தினங்களாக கால்வாய் வெட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
