கிரானைட் குவாரி ஏலம் ரத்து-மதுரை ஆட்சியர் அறிவிப்பு

கிரானைட் குவாரி
மதுரை மாவட்டம், மேலூர் அருகே சேக்கிபட்டி, அய்யாபட்டி மற்றும் திருச்சுனை கிராமங்களில், அரசுப் புறம்போக்கு நிலங்களில் அமைந்துள்ள கிரானைட் கற்களுக்கு குவாரி குத்தகை உரிமம் வழங்க விண்ணப்பங்கள் வரவேற்று ஏல அறிவிப்பு மதுரை மாவட்ட அரசிதழில் 03.10.2023-ல் வெளியிடப்பட்டு 31.10.2023 அன்று பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களின் பல்வேறு போராட்டத்தை அடுத்து 31.10.2023 அன்று நடைபெற இருந்த பொது ஏலம், ஒரு மாத கால அளவிற்கு ஒத்திவைக்கப்பட்டு, 30.11.2023 அன்று பொது ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த புதிய நான்கு கிரானைட் குவாரி ஏலத்தை ரத்து செய்ய வேண்டும் என நான்கு நாட்களாக மேலுர் மற்றும் மேலூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் தங்கள் போராட்டத்தை தீவிர படுத்தப் போகிறோம் என இன்று காலை பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது தெரிவித்த நிலையில், இந்த நான்கு புதிய கிரானைட் குவாரிகள் அமைப்பதற்கான ஏலத்தை ரத்து செய்வதாக மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு விடுத்துள்ளார்..
