டெபாசிட் தொகைக்காக காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் வேட்பாளர்

டெபாசிட் தொகைக்காக காலி மதுபாட்டில்களை சேகரிக்கும் வேட்பாளர்

மதுபாட்டில்களை சேகரிக்கும் ஆறுமுகம் 

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் போட்டியிட உள்ள வேட்பாளர் காலி மதுபாட்டில்களை சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் மனுதாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.இந்த சூழலில், கடந்த 14-ந்தேதி முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வருகிற 21-ந்தேதி வேட்பு மனு தாக்கலுக்கு கடைசி நாள் என்கிற நிலையில் இதுவரைக்கும் 6 சுயேச்சைகள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் சார்பில் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் ஆறுமுகம் என்பவர் களம் காண்கிறார். இவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்வதற்காக, விக்கிரவாண்டி சட்ட மன்ற தொகுதியில் ஆங்காங்கே கிடக்கும் காலி மதுபாட்டில்களை ஒரு பையில் சேகரித்து வருகிறார். காலி மதுபாட்டில்கள் விற்பனை செய்து அதில் வரும் பணத்தை கொண்டு மனுதாக்கல் செய்ய அவர் திட்டமிட்டுள்ளார். இதற்காக வேட்பாளர் ஆறுமுகம், வெள்ளை நிறத்தில் சேலை அணிந்து கொண்டு விதவை கோலத்தில் கையில் மஞ்சள் கயிறுகளுடன், சாக்கு பையில் மதுபாட்டில்களை சேகரிக்கிறார்.

மேலும், தான் வெற்றிப்பெற்றால், மதுவால் கணவனை இழந்த பெண்கள் பற்றி கணக்கடுப்பு நடத்தி, அவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும், அந்த பெண்களின் குழந்தைகளுக்கு இலவச கல்வி வழங்கப்படும், டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு பத்து ரூபாய்க்கு மேல் வாங்குவது தடுக்கப்படும் என பல்வேறு வாக்குறு திகளை வழங்கி பிரசாரத்தையும் ஆறுமுகம் தனது ஆதரவாளர்களுடன் சென்று முன்னெடுத்து வருகிறார். இது போன்ற வித்தியாசமான பிரசாரங்களால் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

Tags

Next Story