வேட்பாளர்கள் நாளைக்குள் தேர்தல் செலவின கணக்குகளை சமர்ப்பிக்க அவகாசம்
கன்னியாகுமரியில் வேட்பாளர்கள் நாளைக்குள் தேர்தல் செலவின கணக்குகளை சமர்ப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தலைமையில், தேர்தல் செலவின பார்வையாளர்கள் சேஷாத்ரி மற்றும்அபிஷேக் குமார் பன்சால், ஆகியோர் முன்னிலையில் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் முகவர்களுடன், வேட்பாளர்களின் இறுதி தேர்தல் செலவினம் கணக்கு தாக்கல் தொடர்பான ஒத்திசைவு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 18 நபர்களும் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் 9 நபர்களும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் ஆணைய விதிமுறைகளின்படி வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற 30-ம் நாளான 03.07.2024 மாலைக்குள் தேர்தல் செலவின கணக்குகள் சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டது. இக்கூட்டத்தில் தேர்தல் செலவின பொறுப்பு அலுவலர் செல்வகுமார், உதவி தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் கணக்கீட்டு குழு அலுவலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.