தொகுதிக்கு உட்பட்டவரே வேட்பாளராக வரவேண்டும்: காங். நிர்வாகிகள்
செய்தியாளர்களை சந்தித்த நிர்வாகிகள்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பொறுப்பாளர்கள் ஒன்று திரண்டு செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளரும், கொள்ளிடம் ஒன்றியக் குழுத் துணை தலைவருமான பானு சேகர் கூறுகையில்,
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனை நாங்கள் மனப்பூர்வமாக வரவேற்று, மகிழ்கிறோம். 10 ஆண்டுகளுக்குப் பிறகு கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளார்கள். எங்களுடைய கோரிக்கை என்னவென்றால் மயிலாடுதுறை தொகுதி 6 சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கியது.
இதில் நிறுத்தப்படும் வேட்பாளர் இந்த 6 தொகுதிக்கு உட்பட்ட ஒரு வேட்பாளரை காங்கிரஸ் கட்சித் தலைமை அறிவிக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம்.இது கட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் தலைமைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாங்கள் ஒன்று கூடி உள்ளோம்.
இது எங்களுடைய நோக்கம் மட்டுமல்ல அனைத்து பொதுமக்களின் உணர்வு. பொதுமக்களை சந்திக்கும்போது நம்ம பகுதியை சார்ந்தவர்களை காங்கிரஸ் பாராளுமன்ற வேட்பாளராக தலைமை ஏன்? அறிவிப்பதில்லை என முன்மொழிகின்றனர். திரும்பத் திரும்ப கூறுவது என்னவென்றால் 6 சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒரு வேட்பாளரை தலைமை அறிவித்தீர்கள் என்றால் மக்களிடமும் மிகப்பெரிய செல்வாக்கும்,
மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு பதிவு செய்ய காத்துக் கொண்டுள்ளனர். கட்சி தலைமை இடத்தில் இதனை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்றார். இதேபோல் காங்கிரஸ் வர்த்தக பிரிவு தலைவர் பட்டேல் கூறும்போது, அனைத்துக் கட்சிகளும் யார் போட்டியிட வேண்டும் என்று மாநில, மாவட்ட கமிட்டிகள் கூடி பேசி முடிவேடுப்பார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சியில் அது மாதிரி முடிவு எடுப்பது கிடையாது.
யாரை நிறுத்தலாம் யாருக்கு வாய்ப்பு உள்ளது எந்த சமூகத்தை சேர்ந்தவர்கள அதிகமாக இருக்கிறார்கள் என்ற கேள்வியும் . மாநில, மாவட்ட தலைமை சொல்வதற்கு கட்டுப்படுகிறோம். மயிலாடுதுறை தொகுதியில் இனம் தெரியாத, மொழி தெரியாத மனிதரை, யாருக்கும் எவருக்கும் தெரியாத மனிதரை வேட்பாளராக நிறுத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்றார்.