சேலம் மத்திய சிறையில் கைதிகளிடம் கஞ்சா பறிமுதல்
சேலம் மத்திய சிறை
சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 850-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். சிறையில் கைதிகள் அறையில் அடிக்கடி வார்டர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது சில கைதிகளிடம் இருந்து செல்போன், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று மாலை சிறையில் 7-வது பிளாக்கில் உள்ள கைதிகளின் அறையில் வார்டர்கள் சோதனை நடத்தினர்.
அப்போது கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கஞ்சா வழக்கு கைதி ரமேஷ் (வயது 40), சென்னையை சேர்ந்த கொலை வழக்கு கைதிகள் செல்வகுமார் (27), மதன் (25) ஆகியோர் தனது காலணிகளின் அடிப்பகுதியில் கஞ்சா மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் இருந்து தலா 3 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) வினோத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா வைத்திருந்த 3 பேரும் 3 மாதங்களுக்கு உறவினர்களை பார்க்க தடை விதித்து கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர்களுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? என்பது குறித்து சிறை வார்டர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.