சாலையில் சுற்றும் மாடுகள் பிடிப்பு - ஆணையர் ஆய்வு

நங்கநல்லூரில் நேற்று முன்தினம் மாடுகளால் தாக்கப்பட்டு முதியவர் ஒருவர் இறந்த சம்பவத்தையடுத்து சாலையில் சுற்றி திரியும் மாடுகள் பிடிக்கும் பணியை சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

பெருநகர சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், நங்கநல்லூரில் மாடுகளால் தாக்கப்பட்டு முதியவர் ஒருவர் இறந்த சம்பவத்தைத் தொடர்ந்து, சென்னை ஆணையர் ராதாகிருஷ்ணன் நங்கநல்லூர் பகுதியில் நேரில் சென்று மாநகராட்சிப் பணியாளர்களால் மாடுகள் பிடிக்கும் நடவடிக்கைகளைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாலைகள் மற்றும் தெருக்களில் மாடுகள் நடமாடுவதைக் கட்டுப்படுத்தும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

இச்சம்பவத்திற்குப் பின்னர் இப்பகுதியில் மட்டும் 10 மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்தப் பகுதியானது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் மற்றும் தெருக்களில் நேற்று முன்தினம் மட்டும் 14 மாடுகள் பிடிக்கப்பட்டு மாட்டுத் தொழுவத்தில் அடைக்கப்பட்டது. கடந்த ஆண்டில் 4237 கால்நடைகள் பிடிக்கப்பட்டு, ரூ.9263 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. 2024ல் இதுவரை 8 நாட்களில் 42 கால்நடைகள் பிடிக்கப்பட்டு ரூ.75,000 அபராதம் விதிக்கப்பட்டது. மாமன்றத்தின் தீர்மானத்தின் அடிப்படையில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலைகள் மற்றும் தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகளுக்கான பராமரிப்பு மற்றும் அபராதத் தொகையை மாடு ஒன்றிற்கு ரூ.2000/-த்திலிருந்து ரூ.5,000/- எனவும். பராமரிப்புத் தொகையாக மூன்றாம் நாள் முதல் நாளொன்றிற்கு ரூ.1000/- கூடுதலாக உயர்த்தியும், மீண்டும் அதே மாடுகள் பிடிக்கப்பட்டால் அபராதத் தொகையாக ரூ. 10,000/- எனவும், பராமரிப்புத் தொகையாக மூன்றாம் நாள் முதல் நாளொன்றிற்கு ரூ.1000/- எனவும் கூடுதலாக அபராதம் விதிக்கப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Tags

Next Story