திருப்பூர் : மதுபோதையில் பள்ளிக்குள் புகுந்த கார்
பள்ளிக்குள் புகுந்த கார்
திருப்பூர் வித்யாலயம், பாரதி நகர் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இதில் சுமார் 450-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.இந்த பள்ளியில் நாளை ஆண்டு விழா நடப்பதையொட்டி இன்று மாணவ மாணவிகள் பள்ளி வளாகத்தில் கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை பார்த்து வந்தனர். இந்த நிலையில் திருப்பூர் முருகம்பாளையம் பகுதியில் இருந்து வித்யாலயம் நோக்கி மின்னல் வேகத்தில் வந்த மாருதி 800 கார், திடீரென பள்ளிக்குள் புகுந்தது.
பள்ளி வளாகத்திற்கு முன் நின்ற இரண்டு பேரை தூக்கி வீசிய பின்னர் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய கார் தொடர்ந்து அங்கு கலை நிகழ்ச்சிகளுக்கான ஒத்திகை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீதும் மோதியது இதில் ஆறாம் வகுப்பு படிக்கும் தரணிநாதன் என்ற மாணவன் தூக்கி வீசப்பட்டார். இதனால் மாணவர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர் தொடர்ந்து கட்டுப்பாட்டை இழந்த கார் தேசியக்கொடி ஏற்றுவதற்காக நடப்பட்டிருந்த கம்பத்தின் மீது மோதி நின்றது.
மாணவர்களின் அலறல் சத்தம் கேட்டு பள்ளி ஆசிரியர்களும் பொதுமக்களும் வருவதற்குள் காரை ஓட்டி வந்த நபரும், இன்னொருவரும் அங்கிருந்து தப்பி ஓடினார். இருப்பினும் காருக்குள் இருந்த மற்றொரு நபரை ஆசிரியர்களும் பொதுமக்களும் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும் பிடிபட்டவரும் காரை ஓட்டி வந்தவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது. உடனடியாக போலீசா இருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆம்புலன்ஸ் மூலம் அடிபட்ட மாணவனை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். இதில் காரை ஓட்டி வந்தவர் கார்த்தி, என்பதும் உடன் வந்தவர்கள் செந்தில் குமார், கர்ணன் என்பதும் தெரியவந்தது. 3 பேரும் மதுபோதையில் இருந்ததும் தெரியவந்தது. மதுபோதையில் 100 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் காரை ஓட்டி வந்து, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், பள்ளிக்குள் புகுந்து விபத்தை ஏற்படுத்தியதாக போலீசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.