திருக்காம்புலியூரில் அடுத்தடுத்து கார்-ஆட்டோ, பைக் மோதல்
காவல் நிலையம்
கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, ஆட்டையாம்பரப்பு பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி வயது 58. இவர் ஜனவரி 19ஆம் தேதி காலை 10:30 மணி அளவில் திருச்சி - கரூர் சாலையில், அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார்.
இதே போல, கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம், புது அர்ஜுன காலனி பகுதியைச் சேர்ந்த மதி வயது 29 என்பவர் பயணிகள் ஆட்டோவில் வேலுச்சாமிக்கு பின்னால் சென்று கொண்டிருந்தார். இதே வேளையில், மயிலாடுதுறை மாவட்டம், தலைஞாயிறு பகுதியைச் சேர்ந்த மருதாச்சலம் வயது 46 என்பவர் இவர்களுக்கு பின்னால் காரில் சென்று கொண்டிருந்தார்.
இந்த மூன்று வாகனங்களும், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் சென்றபோது மருதாச்சலம் தனது காரை வேகமாக ஓட்டியதில், மதி ஓட்டிச் சென்ற ஆட்டோ மீது மோதியது. இதனால் நிலை தடுமாறிய மதி அதற்கு முன்பு சென்ற வேலுச்சாமி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் வேலுச்சாமிக்கும், மதிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் மீட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வேலு சாமியையும், நாச்சிமுத்து மருத்துவமனையில் மதியையும் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
சம்பவம் குறித்து வேலுச்சாமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு சென்று விசாரண மேற்கொண்ட காவல்துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய மருதாச்சலம் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் மாயனூர் காவல்துறையினர்.