வில்லுக்குறியில் சாலையில் தலைகீழாக கவிழ்ந்த கார்
தலைக்கீழாக விழுந்த கார்
கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் இருந்து நேற்று இரவு நாகர்கோவில் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. காரை லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வரும் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்த ஜெயசுதாகர் (51) என்பவர் ஓட்டினார். காரில் அவரது மனைவி ஐடாஜெயகனி (48) அவர்களது பத்து வயது மகன், 9 வயது மகள் ஆகியோர் அமர்ந்திருந்தனர்.
வில்லுக்குறி அருகே உள்ள பகுதியில் செல்லும் போது கார் திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி தலைகீழாக கவிழ்ந்தது. இதனால் காரில் இருந்தவர்கள் ஐயோ என்று கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று காரில் இருந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் அனைவரும் உயிர் பிழைத்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த இரணியல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். தேசிய நெடுஞ்சாலையில் தாறுமாறாக ஓடிய கார் தலைகீழாக கவிழ்ந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.