குமரியில் ஏலக்காய் விலை கடும் உயர்வு - ரூ.4000க்கு விற்பனை
ஏலக்காய்
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மலையோர கிராமங்களில் சில பகுதிகளில் ஏலக்காய் பயிரிடப்படுகிறது. ஆனாலும் குமரி மாவட்ட மக்களின் தேவைக்கு ஏற்ற ஏலக்காய் இங்கு சாகுபடி செய்யப்படுவதில்லை. இதனால் கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து இங்கு இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாகர்கோவில் கோட்டார் மார்க்கெட்டில் வழக்கமான நாட்களில் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகும் சாதாரண ஏலக்காய் தற்போது விலை உயர்ந்து ரூபாய் 1,800 முதல் 2000 வரை விற்பனை ஆகிறது.அதுவே சில்லறை விற்பனை கடைகளில் ரூபாய் 2,400 விற்கப்படுகிறது. அதிலும் தரம் பிரிக்கப்பட்ட முதல் ரக ஏலக்காய் மொத்த விலைக்கு 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 வரை விற்க்கப்படுவதாக தெரிகிறது. சில்லறை கடைகளில் அதே ஏலக்காய் 4 ஆயிரம் ரூபாய் வரை விலை போகிறது.
இது குறித்து ஏலக்காய் வியாபாரிகள் கூறுகையில், - குமரி மாவட்டம் கோட்டார் மார்க்கெட்டுக்கு தேனி மற்றும் கேரளாவில் இருந்து ஏலக்காய் விற்பனைக்காக வருகிறது. ஏலக்காய் வரத்து தற்போது குறைந்துள்ளது. இதன் காரணமாகத்தான் இந்த விலை உயர்வு ஏற்பட்டிருக்கிறது. கோடை காலம் முடியும் வரை இந்த விலை சற்று உயர்ந்தே காணப்படும் என்று தெரிவித்தனர்.