தஞ்சாவூரில் 3 குழந்தைகளுக்கு நவீன முறையில் இதய சிகிச்சை

தஞ்சாவூரில் 3 குழந்தைகளுக்கு நவீன முறையில் இதய சிகிச்சை

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் முதல் முறையாக 3 குழந்தைகளுக்கு நவீன முறையில் இதய சிகிச்சை நடைபெற்றது.


தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரியில் முதல் முறையாக 3 குழந்தைகளுக்கு நவீன முறையில் இதய சிகிச்சை நடைபெற்றது.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சையின்றி நவீன முறையில் இதய சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்றார் மருத்துவக்கல்லூரி முதல்வரும், மருத்துவக் கல்வி இயக்குநருமான ஆர். பாலாஜிநாதன். இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது: தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 2015 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை பிறவிலேயே ஏற்பட்ட இதயக் கோளாறுக்கான அறுவை சிகிச்சை 635 பேருக்கு செய்யப்பட்டுள்ளது. ஆனால், அவையெல்லாம் இதய அறுவை சிகிச்சையாக செய்யப்பட்டது. தற்போது பிறவிலேயே ஏற்பட்ட இதயக் கோளாறுக்காக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதல் முறையாக அறுவை சிகிச்சை இல்லாமலேயே இதய உட்செலுத்தி சிகிச்சை முறை (கேத்லேப்) மூலம் 2 வயது, 4 வயது, 7 வயது என 3 குழந்தைகளுக்கு செய்யப்பட்டுள்ளது.

இந்த இதய உட்செலுத்தி சிகிச்சை முறையில் 10 முதல் 15 நிமிடங்களில் அடைப்பு இல்லாத பகுதியில் மூடப்பட்டுள்ளது. இது போன்ற சிகிச்சை தனியார் மருத்துவமனைகளிலும், சென்னையிலும்தான் செய்யப்படுகிறது. இதற்கு ரூ. 2.50 லட்சம் செலவாகும். கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுகாதாரப் பணிகள் துறை மூலம் நடத்தப்பட்ட இதய குறைபாடு உள்ளோருக்கான முகாமில் இந்த 3 குழந்தைகளுக்கும் மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதன் மூலம், இந்த 3 குழந்தைகளுக்கும் 3 நாள்களுக்கு இதய உட்செலுத்தி சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டு, 3 நாள்களில் நலமாகி வீட்டுக்கு திரும்பினர். இதற்காக இதய சிகிச்சைத் துறைத் தலைவர் ஜெய்சங்கர், மயக்கவியல் துறைத் தலைவர் சாந்தி பால்ராஜ், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் கலைவாணி ஆகியோரை பாராட்டுகிறேன் என்றார் பாலாஜிநாதன். அப்போது, தமிழ்நாடு விபத்து மற்றும் அவசர கால சிகிச்சை பிரிவு மாநிலத் திட்ட மேலாளர் எஸ். மருதுதுரை, மருத்துவக் கண்காணிப்பாளர் சி.ராமசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Tags

Next Story