மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு வழிகாட்டி முகாம்
கல்பாக்கம் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம் சார்பில் பிளஸ் 1, 2 மாணவர்களுக்கு மேற்படிப்பு, வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாமை, நேற்று அணுபுரத்தில் நடத்தியது.
செங்கல்பட்டு மாவட்டம்,கல்பாக்கத்தில் இயங்கிவரும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், 'இஷ்ரே', 'ஐ.ஏ.ஆர்.பி.' அமைப்புகளின் கல்பாக்கம் பிரிவுகள் இணைந்து, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ - மாணவியருக்கு, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு வழிகாட்டி முகாமை, நேற்று அணுபுரத்தில் நடத்தியது.
இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குனர் வெங்கட்ராமன், முகாமை துவக்கி பேசியதாவது: அரசுப் பணி, முக்கிய வேலைவாய்ப்புதான். ஆனால், வரையறுத்த எண்ணிக்கையில் தான், இப்பணிகள் உள்ளன. தனியார் நிறுவன வேலைவாய்ப்புகள் ஏராளமாக உண்டு. தொழில்முனைவோராகும் வாய்ப்பு அதிகம். ஒவ்வொரு கல்லுாரியிலும், 'இன்குபேட்டர்' சென்டர் ஏற்படுத்தி, தொழில் முனைவோரை உருவாக்கலாம். உணவுப் பொருட்களை பதப்படுத்தி, ஏற்றுமதி செய்யலாம். சிறிய தொழிலாக துவக்கி, பின் விரிவுபடுத்தலாம்.
தொழில் முனைவோருக்கு, மத்திய அரசு பல உதவிகள் அளிக்கிறது. நான் அறிந்த புதுச்சேரி விவசாயி, கனகாம்பரம் மலரில் கதிரியக்கம் செலுத்தி, 30 வண்ண மலர்களை உருவாக்கினார். ஜனாதிபதி மாளிகையில் நட்டார். நான்காம் வகுப்பே படித்த அவருக்கு, பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. சமூகத்துடன் நம்மை இணைக்கும் ஊடகம், பத்திரிகை, புள்ளிவிபர தரவுகள் சேகரிக்கும் துறை வேலைவாய்ப்புகளும் உள்ளன. நாம் வித்தியாசமாக சிந்தித்தால் முன்னேற முடியும். மற்றவர்களையும் முன்னேற்றலாம். இவ்வாறு அவர் பேசினார்.