டிரைவரை தாக்கி லாரியை எடுத்து சென்ற 4 பேர் மீது வழக்கு
வழக்குப்பதிவு
கடன் தவணை தொகையை செலுத்தாததால் டிரைவரை தாக்கி லாரியை எடுத்து சென்ற 4 பேர் மீது வழக்கு.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ஓங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் முருகதாஸ் (வயது 45). இவர் விழுப்புரத்தைச் சேர்ந்த ரித்தீஷ் என்பவரிடம் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 13-ந் தேதி, மேட்டூரில் இருந்து சாம்பல் லோடு ஏற்றிக் கொண்டு சேலம் வழியாக அரியலூர் நோக்கி லாரியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே வந்த போது, லாரியை நிறுத்தி விட்டு முருகதாஸ் அங்குள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். அப்போது அங்கு வந்த சிலர், முருகதாசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் கட்டையால் டிரைவரை தாக்கி விட்டு, லாரியை எடுத்து சென்று விட்டனர். இது குறித்து அவர் அன்னதானப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், லாரிக்கு கட்ட வேண்டிய கடன் தவணை தொகையை செலுத்தாததால் டிரைவரிடம் அந்த நபர்கள் தகராறு செய்து லாரியை எடுத்து சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார், 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story