குடியரசு தினம்: விடுமுறை அளிக்காத 71 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
பைல் படம்
குடியரசு தினத்தையொட்டி முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட 71 நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி நடவடிக்கை எடுத்து உள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சேலம் மாவட்டத்தில் தேசிய விடுமுறை தினமான, குடியரசு தினத்தன்று முன் அனுமதி பெறாமல் நிறுவனங்கள் செயல்படுகிறதா? என்பது குறித்து ஆய்வு நடத்தப்பட்டது.
அதன்படி மாவட்டம் முழுவதும் கடைகள், நிறுவனங்கள் என மொத்தம் 46 நிறுவனங்களில் ஆய்வு நடத்தப்பட்டது. அதே போன்று ஓட்டல் மற்றும் அதன் சம்பந்தப்பட்ட 64 கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை சட்டத்தின் கீழ் 21 வழக்குகளும், உணவு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் 60 வழக்குகளும் என முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட கடை, ஓட்டல், நிறுவனங்கள் என மொத்தம் 71 வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதேபோன்று தொடர்ந்து ஆய்வு நடத்தப்படும். அப்போது சட்ட விதி முறைகள் கடைபிடிக்காமல் கடைகள், நிறுவனங்கள் செயல்படுவது கண்டு பிடிக்கப்பட்டால் உரிய வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.