விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறியதாக 846 பேர் மீது வழக்கு
கோப்பு படம்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19- ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான தேதியை கடந்த 16-ந் தேதி மாலையில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றைய தினத்தில் இருந்தே தமிழகம் முழுவதும் உடனடியாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
அதன்படி அரசியல் கட்சியினர் அனுமதியின்றி சுவர் விளம்பரம் எழுதவோ, விளம்பர பதாகைகளை வைக்கவோ, கட்சி கொடிக்கம்பம் நடவோ கூடாது என்று தேர்தல் விதிமுறையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சுவர் விளம்பரம் எழுதுதல், விளம்பர பதாகை வைத்தல், கட்சி கொடிக்கம்பம் நடுதல் மற்றும் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பிரசாரம் செய்தல், சாலையின் குறுக்கே கட்சி கொடி களை தோரணங்களாக கட்டுதல்,
அனுமதியின்றி கூட்டம் நடத்துதல் என தேர்தல் விதிமுறையை மீறியதாக இதுவரை 20 வழக்கு கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக அ.தி.மு.க.வினர் 502 பேர் மீதும், நாம் தமிழர் கட்சியினர் 250 பேர் மீதும், இந்திய ஜன நாயக கட்சியினர் 50 பேர் மீதும், மக்கள் ஜனநாயக இளைஞர் கழகத்தினர் 20 பேர் மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 22 பேர் மீதும், பா.ம.க., தே.மு.தி.க. கட்சிகளை சேர்ந்த தலா 2 பேர் மீதும் ஆக மொத்தம் 846 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாரபட்சமின்றி புகார்கள் மீது நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்து வருகிறோம். இந்த நடவடிக்கை தேர்தல் முடியும் வரை தொடரும் என்றனர்.