மாணவியை கர்ப்பமாக்கிய சட்டக்கல்லூரி மாணவர் மீது வழக்குப்பதிவு
வழக்கு பதிவு
குடியாத்தம் அடுத்த கொட்டாரமடுகு கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் விஜயகுமார் (29).இவருக்கு திருமணமாகி மனைவி,2 பிள்ளைகள் உள்ளனர். தற்போது அவரது மனைவி கர்ப்பிணியாக உள்ளார்.விஜயகுமார் கர்நாடகாவில் உள்ள தனியார் சட்ட கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது.
குடியாத்தம் அருகேவுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 21வயது மாணவி ஒடுகத்தூர் அடுத்த அகரம் பகுதியில் உள்ள அரசு கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வந்துள்ளார்.பஸ்சில் செல்லும்போது விஜயகுமாருக்கும்,அந்த மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த ஒரு ஆண்டாக இருவரும் காதலித்து வந்துள்ளனர்.அப்போது விஜயகுமார் தனக்கு திருமணமானதை மறைத்து மாணவியுடன் பழகி வந்துள்ளார்.
மேலும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி நெருங்கி பழகியுள்ளார்.இதில் அந்த மாணவி கர்ப்பமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி சோர்வாக இருந்ததால் அவரது பெற்றோர் விசாரித்த போது காதல் விவகாரம் தெரியவந்துள்ளது.மேலும் விஜயகுமாருக்கு திருமணமாகி பிள்ளைகள் இருப்பது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி கர்ப்பத்திற்கு காரணமான விஜயகுமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.அதன்பேரில் விஜயகுமார் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.