மகளிர் சுய உதவி குழு தலைவியை தாக்கியதாக மூவர் மீது வழக்கு
தாக்குதல்
மதுரை எஸ். எஸ். காலனி சேர்ந்த ராஜா மனைவி மணிமேகலை (32). இவர் மகளிர் சுய உதவிக் குழுத் தலைவியாகச் செயல்பட்டு, வங்கிகள் மூலம் குழுவில் உள்ள பெண்களுக்கு கடன் வாங்கிக் கொடுத்து நிர்வகித்து வருகிறார்.
இதன்படி, மதுரை ஹெச்எம்எஸ் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த கௌரிக்கு மணிமேகலை வங்கியில் இருந்து கடன் தொகை பெற்றுக் கொடுத்தார். ஆனால், இதற்கான கடன் தவணைத் தொகையை கௌரி சரிவரச் செலுத்தாதால், இதுதொடர்பாக அவருக்கும் மணிமேகலைக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், கௌரியின் உறவினரான சிறுவாணி முதல் தெருவைச் சேர்ந்த டெய்சிராணிக்கும் மணிமேகலை ரூ. ஒரு லட்சம் வங்கிக் கடன் வாங்கிக் கொடுத்தாராம். இதற்கான மாத தவணையை வாங்குவதற்காக புதன்கிழமை மாலை மணிமேகலை தனது உறவினர் முனியம்மாளுடன் டெய்சிராணி வீட்டுக்குச் சென்றார்.
அப்போது, அங்கிருந்த கௌரி, டெய்சிராணி அவரது மகன் பரத் ஆகியோர் மணிமேகலையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரைக் கல்லால் தாக்கினார்களாம். தடுக்க வந்த முனியம்மாளையும் தாக்கியுள்ளனர்.
இதில் பலத்த காயமடைந்த மணிமேகலை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து கௌரி, டெய்சிராணி, பரத் ஆகிய மூவர் மீதும் எஸ். எஸ். காலனி போலீஸார் வழக்குப் பதிந்து, தேடி வருகின்றனர்.