டிடிவி தினகரன் மீது தேனியில் வழக்குப்பதிவு. போலீசார் நடவடிக்கை

விதிமுறைகளை மீறியதால் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மற்றும் பலர் மீது தேனி நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனாவிடம் வேட்பு மனுத் தாக்கல் செய்தார். முன்னதாக அன்னஞ்சி விலக்கு பகுதியில் இருந்து பெரியகுளம் புறவழிச்சாலை வழியாக 70 கார்கள், 3 ஆட்டோ மற்றும் 3 இரு சக்கர வாகனங்களில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன் மைக் செட், ஸ்பீக்கர் பாக்ஸ் பொருத்திய வாகனத்தில் மதுரை சாலை வந்து அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் நோக்கி டிடிவி தினகரன் வந்தார். தேர்தல் நடத்தை விதிமுறைகள் படி 100 மீட்டருக்கு முன்னதாக ஊர்வலமாக வந்த வாகனங்கள் நிறுத்தியும் கேளாமல் டிடிவி வாகனம் ஆட்சியர் அலுவலகம் நுழைவாயில் வந்தடைந்தது.

அப்போது பிரசார வேனில் டிடிவி தினகரன் ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் செல்ல போலீசார் அனுமதி மறுத்ததால் அமமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டதால் அமமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் டிடிவி தினகரனின் பிரசார வேனில் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வாகனங்களுடன் வந்ததோடு, அரசுப் பணியை செய்ய விடாமல் போலீசாரை தடுத்ததாக, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் கண்காணிப்பு குழு தலைவர் நீதிநாதன் புகாரில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மற்றும் பலர் மீது தேனி நகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story