ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சமையலர் மீது வழக்கு
தீக்குளிக்க முயன்றவர் மீது வழக்குப்பதிவு
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தாலுகா கந்தன்பாளையத்தை சேர்ந்தவர் தேவதாஸ். இவரது மனைவி நதியா (37). இவரும் கந்தாடு கிராமத்தை சேர்ந்த ஹேமா என்பவரும் கந்தன்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சமையலராக பணியாற்றி வருகின்றனர். ஹேமாவுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. அதில் ரூ.1,500-ஐ ஹேமா, நதியாவுக்கு கொடுத்து வந்துள்ளார். கடந்த 2 மாதமாக நதியாவுக்கு ஹேமா சம்பளத்தை பிரித்துக்கொடுக்கவில்லை. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நதியா முறையிட்டும் உரிய தீர்வு கிடைக்கவில்லை. இதனால் மனவேதனை அடைந்த நதியா, மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் எதிரே திடீரென, தான் கொண்டு வந்திருந்த பெட்ரோல் கேனை திறந்து தன் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றார். இதை சற்றும் எதிர்பாராத அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து சென்று நதியாவை தடுத்து நிறுத்தி அவர் வைத்திருந்த பெட்ரோல் கேன், தீப்பெட்டியை பிடுங்கினர். தொடர்ந்து, இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறி அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். மேலும் கலெக்டர் அலுவலகத்தில் அசம்பாவித செயலில் ஈடுபட முயன்ற காரணத்திற்காக நதியா மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Next Story