ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் ரொக்கம்- ஆவணம் கட்டாயம்
நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, பறக்கும் படை வாகனங்களில் கேமராக்கள் பொருத்தி கண்காணிக்கப்படுகிறது. நாடாளுமன்ற பொது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கண்காணிப்பு பணிகளை சரியாக மேற்கொள்ளவும் விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை மற்றும் ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்பு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகனை மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். மேலும் பறக்கும் படை வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா செயல்பாட்டினை கேட்டறிந்தார். கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடியே பறக்கும் படையினர் எந்த பகுதியில், எந்த இடத்தில் உள்ளனர் என்பதை கணிணி மூலம் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
ஆட்சியர் அருணா நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் மாநில சோதனை சாவடிகள் 4 உள்ளது. மாவட்ட சோதனை சாவடிகள் 12 உள்ளது. சோதனைச் சாவடிகளில் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 21 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ரூ.50 ஆயிரத்தற்கு மேல் ரொக்கமாக பணம் எடுத்து வரும் பட்சத்தில் அதற்குரிய ஒரு ஆவணத்தை கையில் வைத்திருக்க வேண்டும்.
பொதுமக்கள் தேர்தல் நன்னடத்தை விதிகளை பின்பற்ற வேண்டும். நீலகிரி மாவட்டத்தில், நிலையான கண்காணிப்புக்குழு மற்றும் பறக்கும் படை குழுக்கள் ஒரு தொகுதிக்கு 3 வீதம் என மொத்தம் 9 குழுக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். பறக்கும் படை குழுக்கள் தற்போது களத்தில் உள்ளனர். இந்த குழுவினர் 6 மணி முதல் 2 மணி வரை ஒரு குழுவும், 2 மணி முதல் 10 மணி வரை ஓரு குழுவும், 10 மணி முதல் 6 மணி வரை ஒரு குழுவும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். பறக்கும் படை வாகனத்தில் ஜி.பி.எஸ்., மற்றும் கேமரா பொருத்தப்பட்டு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
48 மணி நேரத்திற்குள் பொது இடங்களில் வைத்துள்ள பதாகைகள் உள்ளிட்ட அரசியல் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவைகள் அகற்றப்பட வேண்டும். 72 மணி நேரத்திற்குள் தனியார் இடங்களில் உள்ள பதாகைகள், சுவர் விளம்பரங்கள் உள்ளிட்ட அரசியல் மற்றும் அரசியல் கட்சி சார்ந்தவைகள் அகற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். நீலகிரி மாவட்டத்தில், நாடாளுமன்ற பொது தேர்தல்- 2024 முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் தேர்தல் கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொள்ளும் வகையில் தொலைபேசி எண்களான 0423-2957101, 0423-2957102, 0423-2957103, 0423-2957104 மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணான 1800-425-2782 ஆகியவற்றில் தொடர்பு கொண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவது தொடர்பாக பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கலாம் என்று தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.