குமரியில் வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் , 13 பவுன் நகை மோசடி
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள முளகுமூடு பகுதியை சேர்ந்தவர் ஸ்வீட்லின் மேன ரெஜி (47). இவர் நேற்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- நான் தக்கலை அருகே உள்ள ஒரு ரிசார்ட்டில் ரூம் பாயாக வேலை பார்த்து வந்தேன். அப்போது கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் அங்கு தங்கினார். ரிசார்ட் உரிமையாளர் அவரை அறிமுகம் செய்து நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என கூறினார். கடந்த 4- 3 -2024 முதல் 27/3/2024 - வரை தங்கி இருந்தார். அப்போது ஏற்பட்ட பழக்கத்தில் தமிழ்நாட்டில் அவருக்கு பல அரசியல் தலைவர்களை தெரியும் எனவும், அவர்கள் மூலம் பலருக்கு அரசு வேலை வாங்கி கொடுத்துள்ளதாக அவர் என்னிடம் கூறினார்.
அப்போது நான் எனது மனைவி எம் ஏ, பி எட் ,எம் பில், பிஎச்டி முடித்துவிட்டு நாகர்கோவில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவருக்கு அரசு வேலை வாங்கித் தர முடியுமா என்று கேட்டேன். சம்பந்தப்பட்ட நபரும் உடனடியாக நாகர்கோவில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறி அவர் என்னிடமிருந்து 35 லட்சம் ரூபாயை மூன்று தவணைகளாகவும், மேலும் மனைவியின் 13 பவுன் தங்க நகைகளையும் வாங்கிக் கொண்டார். ஆனால் அவர் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை திடீரென 27 3 2024 அன்று ரூமை காலி செய்து விட்டு சென்று விட்டார். நான் அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவருக்கு புரோக்கர்கள் போல் செயல்பட்டவர்கள் தலைமறைவாகிவிட்டனர். எனவே ஏமாற்றப்பட்ட 35 லட்சம் பணம் 13 பவுன் நகைகளை மோசடி செய்தவரை கண்டுபிடித்து மீட்டு தர வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார்.