பறக்கும் படை சோதனையில் ரூ.95¾ லட்சம் பறிமுதல்
பணம் பறிமுதல்
சேலம் மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படை சோதனையில் ரூ.95¾ லட்சம் பறிமுதல்.
சேலம் மாவட்டத்தில் இதுவரை நடந்த பறக்கும் படை சோதனையில் ரூ.95 லட்சத்து 83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக சேலம் மாவட்டத்தில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளன. அவர்கள் துணை ராணுவத்தினர் மற்றும் போலீசார் உதவியுடன் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் முக்கிய இடங்களில் நின்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு செல்லப்படும் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். மேலும் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 76 கிலோ வெள்ளி கொலுசுகள், ஜாரி கொண்டலாம்பட்டி மற்றும் அன்னதானப்பட்டி பகுதிகளில் சேலைகள் மற்றும் சங்ககிரியில் 11 ஆயிரத்து 300 துண்டுகள் உள்ளிட்டவை உரிய ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றபோது பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டத்தில் இதுவரை ரூ.95 லட்சத்து 83 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story