அமெரிக்காவில் சாதி – நூல் வெளியீட்டு விழா
நூல் வெளியீட்டு விழா
எழுத்தாளர் அருள்மொழி எழுதிய 'அமெரிக்காவில் சாதி' என்ற நூல் வெளியீட்டு விழா அவிநாசியில் நடைபெற்றது. இதில், சாதி இடத்துக்குத் தக்க வடிவத்தை மாற்றி உயிரோடு இருக்கிறது, என்று நூலாசிரியர் அருள்மொழி கூறினார். அவிநாசி கோவம்ச திருமண மண்டபத்தில் ஞாயிறன்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் சார்பில், மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ஈஸ்வரன் தலைமையில், நடைபெற்ற இந்த விழாவில் க.மு.ஆயிஷா வரவேற்றார்.
எழுத்தாளர் அருள்மொழி எழுதி, பாரதி புத்தகாலயம் பதிப்பித்திருக்கும் 'அமெரிக்காவில் சாதி' என்ற புத்தகத்தை திருப்பூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வெ.குமார ராசா வெளியிட்டார். அமெரிக்காவுக்கு போனால் வசதியாக வாழலாம் என்று இருக்காமல், விரிந்த சமூக பார்வையில் அமெரிக்காவில் சாதி இருப்பதை, எழுத்தாளர் அருள்மொழி பதிவு செய்திருப்பதை குமார ராசா சுட்டிக்காட்டினார். தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அவிநாசி கிளையை சேர்ந்த சாய் கண்ணன் அந்த நூலை பெற்றுக் கொண்டார்.
அவிநாசி பேராசிரியர் போ. மணிவண்ணன், எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா ஆகியோர் இந்த நூலை அறிமுகப்படுத்தி பேசினர். சாதி குறித்து அமெரிக்கர்களுக்கு தெரியாது. ஆனால் இங்கிருந்து 50 களில் அமெரிக்காவுக்கு சென்றவர்கள் தான் சாதியைப் பற்றி அமெரிக்கர்களுக்கு புரிய வைத்திருக்கின்றனர். கற்ற சமூகம் தான் சாதியை நிலை நிறுத்த பார்க்கிறது. கலிபோர்னியாவில் இருக்கும் சிலிக்கான் வேலி எப்படி சாதிய வேலியாக பிரிக்கப்படுகிறது என்று இந்த நூல் அம்பலப்படுத்துகிறது. சாதியத்திற்கு எதிராக மாற்றம் காண இடதுசாரிகள் முயற்சிக்கும் வேளையில் வலதுசாரிகள் சாதிய கட்டமைப்பை பாதுகாக்க முழு வீச்சில் வேலை பார்க்கிறார்கள். முகநூலில் கூட சாதிவாரியாக குழுக்களை அமைத்தனர்.
உணவு அரசியல், அடையாள அரசியல் மூலம் சாதியை நிலை நிறுத்துகின்றனர். சாதி ஆணவக் கொலை, தொடர் பாலியல் வன்முறை, கடுமையான உழைப்பு சுரண்டல் என சாதியத்தின் வெளிப்பாடு அமெரிக்காவில் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. பாடத்திட்டத்தில் இந்துக்களை தவறாக சித்தரிப்பதாகவும், சாதி என்ற சொல்லை நீக்க வேண்டும் என்றும் ஆதிக்கம் செலுத்தும் சாதியினர் அங்கு கடும் முயற்சி மேற்கொண்டு இருக்கின்றனர், ஆனால் அந்த சட்டத்தை மாற்றவில்லை, என்று பேராசிரியர் மணிவண்ணன் இந்த நூலை அறிமுகப்படுத்தினார்.
எழுத்தாளர் சம்சுதீன் ஹீரா பேசுகையில், சாதிய ஒடுக்கு முறைக்கு மேலாதிக்கத்திற்கு எதிராக நாம் சில முன்னேற்றங்களை அடைந்திருக்கிறோம் என்று நினைத்தால், அமெரிக்காவில் சாதி என்ற நூலை படிக்கும் போது, நாம் போக வேண்டிய தூரம் வெகு தூரம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. அங்கு கோயில்கள் பன்னாட்டு நிறுவனங்கள் அளவுக்கு செல்வம் குவித்து வைத்திருக்கின்றன. அது ஒரு சமூக அதிகாரமாக, அங்கீகாரம் பெற்று இருக்கிறது. அமெரிக்காவின் இனவெறியும், இந்தியாவின் பார்ப்பனிய சாதிய கட்டமைப்பும் ஒன்றோடு ஒன்று கூட்டு சேர்ந்து செயல்படுகின்றன. அமெரிக்காவில் சாதி என்ற நூலை விரிவாக மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கூறினார்.
நிறைவாக நூல் ஆசிரியர் அருள்மொழி ஏற்புரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், சாதி இல்லை என்று பேசுகிறோம், ஆனால் பிறப்பிலிருந்து கல்யாணம், கருமாதி என இறப்பு வரை வாழ்க்கையை வடிவமைப்பதில் சாதி இருக்கிறது. நன்கு படித்து வெளிநாட்டுக்கு போனால் இங்குள்ள ஒடுக்கு முறையில் இருந்து தப்பிக்கலாம் என நினைத்து முதல் தலைமுறையினர் கனவுகளுடன் அங்கு போய் இறங்குகிறார்கள். ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு சென்றவர்கள் சைவஉணவு கலாச்சாரம், கொலு வைப்பது என நுட்பமாக சாதியை புகுத்தியுள்ளனர். சாதிய ஒடுக்குமுறை இருக்கிறது என்று பேசினாலே வெள்ளைக்காரனை விட பயங்கர வெள்ளைக்காரனாக அவர்கள் மாறி விடுகிறார்கள்.
இங்கிருந்து பிள்ளைகளை பார்க்கச் செல்லும் பெற்றோர்களும், எந்த ஊர், என்ன உணவு என்று ஆரம்பித்து வெளிப்படையாக கேட்காமலே சாதியை புரிந்து கொள்கின்றனர். நமது முந்தைய தலைமுறையினர் போராடி உரிமையை பெற்று தந்தார்கள். ஆனால் நம் அடுத்த தலைமுறையை பார்க்கும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது. வருகின்ற வேலையை வேண்டாம் என கைவிடுகின்றனர். பெண்களைத் திரட்டி சத்தியம் வாங்குகிறார்கள். புதிய நுட்பமாக சொத்தில் பங்கு வேண்டாம் என்றும் எழுதி வாங்குகிறார்கள், அமெரிக்காவுக்கு போய் கணவரின் சுயம் தெரியும் பொழுது பெண்கள் ஒன்றும் செய்ய முடியாத நிலைக்குப் போய் விடுகின்றனர்.
தகுதி, தனித்திறமை என்பதெல்லாம் சுரண்டிய கூட்டம் சொல்லிக் கொடுத்தது. நாம் போகும் பாதை கடினமானது. ஆனால் மக்களை முட்டாளாக வைத்திருப்பது எளிது. சமூக ரீதியாக, பாலின, வர்க்க ரீதியாக அடைந்த முன்னேற்றத்தில் தான் நாம் இந்த வாய்ப்பை பெற்றிருக்கிறோம், மற்றவர்கள் வாய்ப்பு கிடைக்காதவர்களாக உள்ளனர் எனப் புரிந்து கொள்வதே நேர்மை, சாதி இடத்துக்குத் தக்க வடிவத்தை மாற்றி உயிரோடு இருக்கிறது, என்று நூலாசிரியர் அருள்மொழி கூறினார். அவிநாசி எழுத்தாளர் சங்க நிர்வாகி கொ.ரகு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் திரளானோர் பங்கேற்றனர். முடிவில் அவிநாசி கிளை தமுஎகச வை சேர்ந்த ரா. ராஜேந்திரன் நன்றி கூறினார்.