வாகனம் மோதி புனுகு பூனை பலி!
புனுகு பூனை
மசினகுடி சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி புனுகு பூனை இறந்தது.
இந்திய சிறிய புனுகு பூனை என்ற விலங்கு தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் பரவலாக காணப்படுகின்றன. விவசாய நிலங்களையும் அதை ஒட்டிய நிலப்பரப்புகளிலும் அதிக அளவிலாக வாழ்ந்து வரும் இந்த விலங்கு இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் அமைப்பு மிக வேகமாக அழிவைச் சந்தித்துவரும் ஒரு விலங்காக பட்டியலிட்டு உள்ளது. இந்த நிலையில் ஊட்டி- கூடலூர் சாலையில் மசினகுடி அருகே புனுகு பூனை ஒன்று அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் இறந்து கிடந்தது. அழிவில் விளிம்பில் உள்ள இந்த பூனைகள் கடந்த சில நாட்களாக வாகனங்களில் தொடர்ந்து அடிபட்டு இறப்பது வனவிலங்கு ஆர்வலர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இது குறித்து வனவிலங்கு ஆர்வலர்கள் கூறும்போது: "இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில், தமிழ்நாட்டின் ஆனமலை புலிகள் காப்பகம், களக்காடு முண்டந்துரை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட வனப்பகுதிகளில் இந்த வகை புனுகு பூனைகள் உள்ளன. இந்திய சிறிய புனுகு பூனைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில் தனது உணவைத் தேடி நிலப்பரப்பு மற்றும், பாறைகளிலுள்ள எலிகள், பாம்புகள் மற்றும் பூச்சியினங்களை உணவாகக் தேடி செல்லும். ஒன்பது ஆண்டுகள் வாழும் இவை நான்கு அல்லது ஐந்து குட்டிகளை ஈனும். இயற்கை சமநிலையில் அனைத்து விலங்குகளும் முக்கியமானதாகும். எனவே இரவு நேரங்களில் வனப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மெதுவாக வாகனங்களை ஓட்ட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Next Story