புளுதியூர் வார சந்தையில் கால்நடைகள் விற்பனை ஜோர்
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கோபிநாதம்பட்டி கூட்ரோடு புளுதியூரில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை நாட்களில் கால்நடை வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. இந்த சந்தைக்கு தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சேலம்,கிருஷ்ணகிரி,நாமக்கல், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்கள், வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், கறவை மாடுகள், எருமை மாடுகள், இறைச்சி மாடுகள்,நாட்டுக்கோழிகள் மற்றும் சேவல்கள் ஆகியவற்றை விற்பதற்காகவும் வாங்குவதற்காகவும் வந்து சொல்கின்றனர்.
மேலும் வெளி மாநில மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கால்நடைகள் வாங்க வந்து செல்வார்கள். நேற்று நடந்த சந்தையில் ஒரு மாடு 6000 ரூபாய் முதல் 48 ஆயிரம் ரூபாய் வரையிலும், ஆடுகள் அளவு மற்றும் ரகத்தைப் பொறுத்து 5 ஆயிரம் ரூபாய் முதல் 10 ஆயிரம் ரூபாய் வரையிலும், நாட்டுக்கோழிகள் 300 ரூபாய் முதல் 600 ரூபாய் வரையில் விற்பனையானது. மேலும் நேற்று நடைபெற்ற சந்தையில் 34 லட்சத்திற்கு கால்நடைகள் வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.