கட்டுமான பணிகளின்போது எச்சரிக்கை - மின்வாரியம் அறிவுரை
மின்சார வாரியம் எச்சரிக்கை
கட்டுமான பணிகள் செய்யும் போது, மின் விபத்து தவிர்க்க பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும் என, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சுனில்குமார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: புதிய வீடுகள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கட்டுமானம் செய்யும் போது, தொழிலாளர்கள், கட்டுமான பணி செய்யுமிடங்களில், தாழ்வாக செல்லும் உயர் மற்றும் குறைந்தழுத்த மின் கம்பி இடைவெளி இருக்க வேண்டும். பழைய கட்டடங்களை இடித்து அகற்றும் போது, சர்வீஸ் மின் இணைப்பு ஒயர் துண்டிக்கப்பட்டு உள்ளதா என, உறுதி செய்துக் கொள்ள வேண்டும். ஈரமான கட்டடங்களில், பராமரிப்பு வேலை செய்யும் போது, மின் இணைப்பு துண்டிப்பில் உள்ளதா என, உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும். கட்டுமான பணிக்கு சாரம் கட்டும் போது, வாகனங்களில் இருந்து கட்டுமானப் பொருட்களை இறக்கும் போது, மின் இணைப்பு ஒயருக்கும், கட்டுமான பணிகள் செய்யும் இடத்திற்கும் உரிய இடைவெளி இருக்கிறதா என, உறுதி செய்ய வேண்டும். பெயின்ட் மற்றும் சிமென்ட் பூச்சு பூசும் போது, மின் வழித்தடம் சென்றால், சம்பந்தப்பட்ட மின் வாரிய அதிகாரிகள் அனுமதி பெற வேண்டும். மின் துண்டிப்பு மற்றும் மின் கம்பியில் பி.வி.சி., பைப் ஆகிய விதிமீறல் செயல் செய்யக்கூடாது. கட்டுமான பணிகள் செய்யும் போது, மின் சாரத்தில் இயங்கும் மின் சாதனப் பொருட்களுக்கு மின் இணைப்பு எடுக்கக்கூடாது. மின் அதிர்வு தாக்கிய நபரை, மின் இணைப்பு துண்டிக்காமல், காப்பாற்றக்கூடாது. மின் அவசர தேவைக்கு, அருகில் இருக்கும் மின் வாரிய அலுவலகம் மற்றும் மின்னகம் 94987 94987 மொபைல் எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.