காங்கிரசும், திமுகவும் ஆட்சியில் இருந்தால் காவிரிநீர் கிடைக்காது: அண்ணாமலை

காங்கிரசும், திமுகவும் ஆட்சியில் இருந்தால் காவிரிநீர் கிடைக்காது: அண்ணாமலை

அண்ணாமலை

காங்கிரசும், திமுகவும் ஆட்சியில் இருந்தால் காவிரி நீர் கிடைக்காது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தேரடியில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு எம். முருகானந்தத்துக்கு ஆதரவாக சனிக்கிழமை மாலை பிரசாரம் செய்த அவர் பேசியது: காவிரி பிரச்னை தொடர்பான தீர்ப்பு காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்டாலும்,

ஆணையம் அமைக்கப்படவில்லை. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் காவிரி மேலாண்மை ஆணையம் 2018 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டது. கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் இருந்த வரை காவிரி நீரை யாரும் தடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு காவிரி நீரைத் தடுப்பது மட்டுமல்லாமல், மேக்கேதாட்டு அணையைக் கட்டுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், மேக்கேதாட்டு அணையைக் கட்ட அனுமதி கிடையாது என மத்திய அரசு உறுதியாகக் கூறிவிட்டது. இந்தியா கூட்டணியில் ஒருவர் பேச்சை மற்றொருவர் கேட்பதில்லை. இந்நிலையில், இவர்கள் ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும். கர்நாடகத்தில் காங்கிரசும், தமிழகத்தில் திமுகவும் ஆட்சியில் இருந்தால் காவிரியில் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பில்லை. இருவரும் பிற்போக்கான ஆட்சி செய்து வருகின்றனர். எனவே, திமுகவுக்கு வாக்களிப்பது மிகப் பெரிய பாவத்தைச் செய்வதற்கு சமம். பாஜகவுக்கு தாமரை சின்னத்துக்கு வாக்களித்தால் இப்பகுதியை வலிமைப்படுத்தும்.

காவிரியில் முறையாக தண்ணீர் வர வேண்டுமானால் காங்கிரசும், திமுகவும் அதிகாரத்துக்கு வரக்கூடாது. இந்தியாவில் நடைபெறும் மக்களவைத் தேர்தலை உலக நாடுகளே திரும்பிப் பார்க்கிறது. இத்தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மோடி மூன்றாவது முறையாக பிரதமரானால் வலிமைமிக்க பாரதம் உருவாக்கும். அதற்கான வாய்ப்பை பிரதமர் மோடிக்கு ஏற்படுத்தி தர வேண்டும் என்றார் அண்ணாமலை. இக்கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு இணை ஒருங்கிணைப்பாளர் ஆர். வைத்திலிங்கம், அமமுக வழக்குரைஞர் பிரிவு செயலர் வேலு. கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story