பட்ஜெட் மானிய கூட்டத்தொடர் வரை போராட்டம் நிறுத்தம் - ஜாக்டோ ஜியோ
ஜாக்டோ - ஜியோ
பழைய ஓய்வூதிய திட்டம் , மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், சரண்டர் விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசு பணியாளர்களுக்கு ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும், உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் தமிழக அரசு அந்த கோரிக்கைகளை நிறைவேற்றாததால் பல்வேறு கட்ட போராட்டங்களை அறிவித்து நடத்தி வந்தனர்.
அதில், ஒரு பகுதியாக வேலை நிறுத்தப் போராட்டத்தை ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அறிவித்து இருந்த நிலையில், அந்த போராட்ட அறிவிப்பை முதலமைச்சரை சந்தித்து ஆலோசனை நடத்திய பின் திரும்ப பெற்றனர். தொடர்ந்து, இன்று சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஜாக்டோ ஜியோ வெளியிட்ட அறிவிப்பில் பட்ஜெட் மானிய கூட்டத்தொடர் வரை போராட்டத்தை நிறுத்தி வைப்போம். நமக்கான அறிவிப்புகள் வரும் என்ற நம்பிக்கையோடு காத்திருப்போம். இன்னும் கொஞ்சம் பொறுத்து இருப்போம் என்றும், முதலமைச்சர், தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் பணியாளர்கள் குறித்தான தேர்தல் கால வாக்குறுதிகள் குறித்து கொள்கை முடிவினை அறிவிக்க வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ கேட்டுக் கொண்டுள்ளது.