காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அலுவலர் நாள் விழா கொண்டாட்டம்
காரைக்குடி அழகப்பா பல்கலை 40 வது ஆண்டு, அலுவலர் நாள் விழாக்களில் மருத்துவ கல்வி இயக்குனர் சங்குமணி பேசினார். இவ்விழாவிற்கு துணைவேந்தர் ரவி தலைமை வகித்தார். பதிவாளர் செந்தில்ராஜன் வரவேற்றார். ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராஜாராமன், நிதி அலுவலர் வேதிராஜன் பங்கேற்றனர்.
விழாவில் சங்குமணி பேசியதாவது, நிர்வாகத்தில் அலுவலர்களை அனுசரித்து செல்வது முக்கியம். இந்திய அளவில் சிறப்பானது காரைக்குடி அழகப்பா பல்கலை. இக்கல்வி நகரை உருவாக்கியவர் அழகப்பர். ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் மாணவர்கள் கல்வி முடித்து செல்கின்றனர். இப்பல்கலை மூலம் பின்தங்கிய சிவகங்கையை கல்வி வளர்ச்சி நகராக உருவாக்கி வருகின்றனர்.
கொரோனா காலம் டாக்டர்களுக்கு சோதனை காலம். மதுரை அரசு மருத்துவமனையில் 18,500 கொரோனா நோயாளிகளை நேரடியாக சந்தித்தேன். கொரோனா காலத்தில் நாங்கள் சிகிச்சை அளித்ததோடு, நோயாளிகளிடம் அன்பையும் செலுத்தினோம். அக்கால கட்டம் தான் அனைத்து உயிரிடத்திலும் அன்பு செலுத்த வேண்டும் என்பதை கற்றுத்தந்தது.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களை காப்பாற்றுமாறு மதுரை மீனாட்சி அம்மனிடம் கதறி அழுதேன். ஒவ்வொரு நொடியும் நாம் உயிருடன் இருப்பது கடவுளின் அனுக்கிரகம் தான். வாழ்க்கையை நேர்மறையாக எடுத்து செல்ல வேண்டும் என பேசினார்