சேலத்தில் காபி பாரில் கீழே விழுந்தவரிடம் செல்போன் திருட்டு
கோப்பு படம்
சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள காடையாம்பட்டி நடுப்பட்டி கீழத்தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (33). இவர் தனது காரில் நேற்று சேலம் டவுனுக்கு வந்துள்ளார். கோட்டை மைதானம் பகுதியில் உள்ள காபி பாருக்கு முன் காரை நிறுத்திவிட்டு, கடைக்கு சென்றார். அப்போது காபி பாரின் படிக்கட்டில் ஏறும்போது கால் தவறி கீழே விழுந்தார்.
அந்த நேரத்தில் அவரது பாக்கெட்டில் இருந்த செல்போனை அருகில் நின்றிருந்தவர் திருடினார். உடனே அந்த போனை பக்கத்தில் நின்றிருந்த 2 பேரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இதுபற்றி டவுன் குற்றப்பிரிவு போலீசில் செல்வ்ராஜ் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் பிரபாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். அதில், செல்வராஜியிடம் செல்போன் திருடியது, கிச்சிப்பாளையம் காந்திமகான் தெருவை சேர்ந்த ராஜா (39),
குகை பஞ்சந்தாங்கி ஏரி கொல்லம்பட்டறை பகுதியை சேர்ந்த கதிர்வேலு (45), கன்னங்குறிச்சி சின்னகொல்லப்பட்டியை சேர்ந்த லோகேஸ்வரன் (31) எனத்தெரியவந்தது. அந்த 3 பேரையும் போலீசார் கைது செய்து, திருடு போன செல்போனை மீட்டனர். பின்னர், கைதான 3 பேரையும் சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, மத்திய சிறையில் அடைத்தனர்.