பேருந்து நிலையத்தில் செல்போன் திருட்டு - சிசிடிவி காட்சிகள் வைரல்
சிசிடிவி காட்சி
திருப்பூர் மத்திய பேருந்து நிலையத்தில் அப்சல் என்பவர் மொபைல் வேர்ல்ட் என்ற பெயரில் செல்போன் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு இன்று மதியம் வந்த இரண்டு இளைஞர்கள் தங்களது செல்போனுக்கு டெம்பர் கிளாஸ் மாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதனை எடுத்து கடையில் இருந்த ஊழியர்கள் டெம்பர் கிளாஸ் மாற்றிக் கொண்டிருந்த போது கடையின் டேபிள் மேல் இருந்த 18 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போனை எடுத்து பார்ப்பது போல சைகை செய்து வந்துள்ளனர். கடை ஊழியர்கள் கவனிக்கவில்லை என தெரிந்த இளைஞர்கள் மற்ற வாடிக்கையாளர்கள் வருவதை சாதகமாக பயன்படுத்திக் கொண்டு செல்போனை தனது டிராயர் பாக்கெட்டில் மறைத்து வைத்துக் கொண்டு தங்கள் செல்போனை பெற்றுக் கொண்டு அவசரமாக கிளம்பி வெளியே சென்றுள்ளனர்.
சிறிது நேரம் கழித்து செல்போன்களை சரிபார்த்த போது குறிப்பிட்ட செல்போன் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து பார்த்த போது இளைஞர்கள் செல்போனை திருடியது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.