செல்போன் டவர் அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டி மனு
திருப்போரூர் அடுத்த ஆமூர் ஊராட்சியில், குடியிருப்பு பகுதியில் செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, ஆமூர் பகுதிவாசிகள் தாசில்தாரிடம் நேற்று மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆமூர் ஊராட்சி, அம்பேத்கர் தெருவில், 750 குடும்பங்கள் உள்ளன.
குப்பன் என்பவர் வீட்டின் பின்புறம், செல்போன் டவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு, பெரியவர்கள், கர்ப்பிணியர், குழந்தைகள் உள்ளனர். மேலும், கால்நடைகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன. செல்போன் டவரால் புற்றுநோய், மலட்டுத்தன்மை, ரத்தசோகை போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.
புயல் மழை போன்ற நேரங்களில் டவர் சாய்ந்து விழுந்தால், வீடுகள் இடிந்து விழும் அபாயம் உள்ளது. உயிர்சேதம் ஏற்படும் சூழலும் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, செல்போன் டவர் அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்ற தாசில்தார் பூங்கொடி, டவர் அமைப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார். அதன்பின், மக்கள் தாலுகா அலுவலகத்திலிருந்து கலைந்து சென்றனர். தொடர்ந்து, பி.டி.ஓ., அலுவலகத்திலும் மனு அளிக்கப்பட்டது.