மத்திய பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது

மத்திய பட்ஜெட் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது
தாஜுதீன்
ஒன்றிய அரசு அறிவித்துள்ள இடைக்கால பட்ஜெட் ஏழை, எளிய, மீனவ மக்களுக்கானது அல்ல, கார்ப்பரேட் முதலாளிகளுக்கானது என்று மீனவர் நல வாரிய துணைத் தலைவர் தாஜுதீன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மீனவர் நல வாரிய துணைத் தலைவர் தாஜுதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது, ஒன்றிய அரசு இடைக்கால நிதிநிலை அறிக்கையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டீசல், பெட்ரோல் விலையை குறைக்காமல் தாக்கல் செய்துள்ளது கண்டனத்துக்குரியது. டீசல், பெட்ரோல் விலை ஏற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்படுவது ஏழை, எளிய மக்கள். ஜி.எஸ்.டி போன்ற வரிகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின் தங்கியுள்ளனர் . இடைக்கால நிதிநிலை அறிக்கையில் மீனவர்களுக்கான வளர்ச்சி திட்டங்கள் எதுவும் இல்லாமல் இருப்பது மிகவும் வருத்தம் அளிக்கிறது.

ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ஏற்றுமதி வாய்ப்பு, கடல் பொருட்கள் மூலம் மீனவர்களால் அரசுக்கு ஏற்படுத்தி தரப்படுகிறது. ஆண்டுக்கு 45 ஆயிரம் கோடி அந்நிய செலாவணி, மக்களுக்கு சத்தான புரத உணவும் மீனவர்களால் வழங்கப்படுகிறது. ஆனால் மீனவர் முன்னேற்றத்திற்கான எந்த திட்டமும் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படவில்லை. 10 வருட பாஜக ஆட்சியில் மீனவர்கள் படும் துன்பங்களுக்கு அளவில்லை. செலவீனம் அதிகரித்து வருவாய் குறைந்து மீனவர்கள் மிகவும் பின்தங்கி வருகின்றனர்.

மீனவர்கள் மீன் பிடிக்க படகுகளுக்கு டீசலையே அதிகம் பயன்படுத்துகின்றனர். பயன்படுத்தும் டீசல் மூலம் ஒவ்வொரு மீனவர்களும் ஆண்டு ஒன்றுக்கு மறைமுக வரியாக பல லட்சம் செலுத்துகிறார்கள். உதாரணத்திற்கு சாலையே பயன்படுத்தாத, கடலையே பயன்படுத்தி வரும் மீனவர்களும் டீசல் மூலம் சாலை வரி மற்றும் பசுமை வரி போன்ற வரிகளை ஒவ்வொரு லிட்டர் டீசலுக்கும் செலுத்துகின்றனர். இந்நிலை நீடித்தால் மீனவர் என்ற ஒரு இனம் இந்தியாவில் இல்லாமல் போய்விடும். மீனவ சமுதாயம் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஒட்டுமொத்தமாக பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Tags

Next Story