மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்:திருப்பூர் தொழில்துறையினர் கருத்து
தொழிலதிபர்
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் குறித்து தொழில்துறையினர் கருத்து திருப்பூர், மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை நேற்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இது குறித்து திருப்பூர் தொழில்துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர். ஏ.இ.பி.சி. தென்பிராந்திய பொறுப்பாளர் சக்திவேல் கூறியதாவது, பட்ஜெட் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயத்த ஆடைகள் மற்றும் ஜவுளி ஏற்றுமதிக்கான மாநில மற்றும் மத்திய வரிகள் திரும்ப பெறும் திட்டத்தை மார்ச் மாதம் 31ஆம் தேதி 2026 வரை தொடர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது வரவேற்கதக்கது. தொழில்நுட்ப மேம்படுத்துதல் திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு என்பது உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அறிவிப்புகள் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. என்றார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் கே.எம்.சுப்பிரமணியன் கூறியதாவது:& ஆர்.ஓ-.எஸ்.சி.டி.எல். (ஜவுளி ஏற்றுமதிக்கான மாநில மற்றும் மத்திய வரிகள் திரும்ப பெறும் திட்டம்) மார்ச் 2026 வரை நீட்டித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியளிக்கிறது.
ஆடை உற்பத்தி நடைபெறும் பல்வேறு நிலைகளில் எரிபொருள் மீதான வரி, மின்சார உபயோகத்திற்கான வரி, ஏற்றுமதி ஆவணங்களுக்கு உபயோகப்படுத்தும். இதுபோன்ற பல நல்ல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால், இதனை வரவேற்கிறோம். என்றார். சைமா சங்க தலைவர் வைக்கிங் ஈஸ்வரன்:& தனிநபர் வருமான வரி ரூ.7 லட்சம் வரை வரிவிலக்கு செலுத்த தேவையில்லை. வரும் 2024&2025 ஆண்டுகளில் ரூ.2 கோடி குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டித்தருதல், இளைஞர்களுக்கு கடன் உதவி வழங்க ரூ.1 லட்சம் கோடி நிதித்தொகுப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல திட்டங்கள் உள்ளதால் வரவேற்கிறோம். என்றார்.
திருப்பூர் எலாஸ்டிக் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கோவிந்தசாமி: இளைஞர்களின் திறன் மேம்பாட்டை வளர்க்க 1.4 கோடி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க 3 ஆயிரம் ஐ.டி.ஐ. நாடு முழுவதும் அமைப்பது, பெண் தொழில்முனைவோர்களை உருவாக்க முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.30 கோடி புதிய லோன்களை அளிப்பது வரவேற்கத்தக்கது. மேலும், ஜவுளித்தொழில் சார்ந்த அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது என கூறினார்.