இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி

இலங்கை செல்ல சாந்தனுக்கு மத்திய அரசு அனுமதி

சாந்தன்

திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை அவரது சொந்த நாடான இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க 2022ஆம் ஆண்டு நவ.11ஆம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதில், பேரறிவாளன், நளினி, ரவிச்சந்திரன் ஆகிய மூவரும் இந்திய குடியுரிமை பெற்றவா்கள் என்பதால் அவரவா் இருப்பிடம் செல்ல அனுமதிக்கப்பட்டனா். எஞ்சிய 4 பேரும் இலங்கை குடியுரிமை பெற்றவா்கள் என்பதால், வெளிநாட்டவா் பதிவு அலுவலகத்தில் இருந்து உரிய உத்தரவுகள் கிடைக்கும் வரையில் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனா்.ஓராண்டாகியும் இந்த 4 பேரும் விடுவிக்கப்படவில்லை.

தற்போது, சிறப்பு முகாமில் உள்ள முருகன் தனது மகளுடன் லண்டனில் இருக்கவும், சாந்தன் தனது தாயுடன் இலங்கையில் இருக்கவும், ராபா்ட் பயஸ், ஜெயக்குமாா் ஆகிய இருவரும் நெதா்லாந்து செல்லவும் விருப்பம் தெரிவித்தனா். ஆனால், மத்திய அரசிடம் இருந்து உத்தரவு வராததால், இந்த 4 பேரும் திருச்சி சிறப்பு முகாமிலேயே 15 மாதங்களுக்கும் மேலாக உள்ளனா்.

இந்த நிலையில், முகாமிலிருந்த சாந்தனுக்கு சில நாள்களுக்கு முன் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு தொடா் சிகிச்சையில் உள்ளாா்.

இந்தச் சூழலில், சாந்தனை இலங்கைக்கு அனுப்ப மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இதுதொடா்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியா் மா. பிரதீப்குமாா் வெள்ளிக்கிழமை கூறியதாவது: நான்கு பேரின் விவரங்கள் மற்றும் அவா்கள் மீதான சட்ட நடவடிக்கைகள்,

செல்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ள நாடுகள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளோம். மேலும், நாடு மாற்றுவதற்கான நடவடிக்கை தொடா்பாக, மத்திய அரசின் வெளிநாட்டவா் பிராந்தியப் பதிவு அலுவலக (எப்ஆா்ஆா்ஓ) தலைமையிடத்துக்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. இதில், சாந்தனுக்கு மட்டும் இலங்கைக்கு செல்வதற்கான அனுமதியை அளித்து கடிதம் வரப்பெற்றுள்ளது.

தற்போது, சாந்தன் சென்னை அரசு மருத்துவனையில் சிகிச்சையில் உள்ளாா். எனவே, மருத்துவச் சான்று பெற வேண்டியுள்ளது. மேலும், இந்தியாவிலிருந்து வெளியேற்றுவதற்கான உத்தரவையும் எப்ஆா்ஆா்ஓ-விடம் பெற வேண்டியுள்ளது. இவற்றைப் பெற்று, பயணச்சீட்டு, கடவுச் சீட்டுகளையும் பெற்று 2 நாள்களுக்குள் சாந்தனை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

Tags

Next Story