மத்திய அமைச்சர் கூறுவது பச்சை பொய்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

மத்திய அமைச்சர் கூறுவது பச்சை பொய்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி

செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்

மத்திய அமைச்சர் கூறுவது பச்சை பொய் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் பணம் இல்லை என மத்திய நிதியமைச்சர் கூறியிருப்பது பச்சைப் பொய் என்றார் மாநில சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. இதுகுறித்து புதுக்கோட்டையில் அவர் அளித்த பேட்டி: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனக்கு ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம் கொடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது.

எத்தனைப் பேருக்கு அவர் பணம் கொடுத்தாலும், யாரும் அவருக்கு வாக்களிக்கமாட்டார்கள். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 10 ஆண்டுகளாக அமைச்சராக இருக்கிறார். மாநிலங்களவை உறுப்பினர் ஊதியத்தில் இருந்து மாதம் ரூ. 50 ஆயிரம் சேர்த்து வைத்திருந்தாலே தாராளமாக தேர்தலுக்குப் போதும். எனவே, அவர் சொல்வது பச்சைப் பொய் என்பதை நாட்டு மக்கள் அறிவார்கள். திமுக சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க மாட்டோம். எங்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டது.

எனவே, வாக்குக்கு பணம் கொடுக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் பற்றி அமலாக்கத் துறையினர் கணக்கு எடுத்துள்ளார்கள். அவரது குவாரியில் முறைகேடு நடந்துள்ளது. தேர்தல் முடிந்ததும் அந்தக் கணக்கும் புதிதாக எடுக்கப்படும். காங்கிரஸ் கட்சி மீது வருமான வரித்துறை செய்துள்ளது மிகப்பெரிய கொள்ளை. எப்படி ரூ. 1800 கோடி கணக்கு போட்டீர்கள் என ஆட்சிக்கு வந்த பிறகு வருமான வரித்துறை அலுவலர்களைக் கேட்போம் என ராகுல் சொல்லியிருக்கிறார்.

ஆட்சிக்கு வந்த பிறகு கேட்போம்; திருத்துவோம். தேர்தல் ஆணையம், சிபிஐ, அமலாக்கத் துறை அனைத்தும் பாஜகவின் இன்னொரு கூட்டணி. ஜூன் 4ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும் என்றார் ரகுபதி.

Tags

Next Story