பாரதியாரின் படைப்புகளில் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகள்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் படைப்புகளில் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் படைப்புகளை முழுமையாக மையமிட்டு, ஆறுமாத காலப் பயிற்சி கொண்ட சான்றிதழ் படிப்பு, ஓராண்டுக் காலப் பயிற்சியிலான பட்டயப்படிப்பு இரண்டையும் நடத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் வளர் மையம் மற்றும் திருவையாறு பாரதி இலக்கியப் பயிலகம் ஆகியவற்றுக்கிடையே செவ்வாய்க்கிழமை மேற்கொள்ளப்பட்டது. அயல்நாடுகளிலும், இந்தியாவிலுள்ள பிற மாநிலங்களிலும் தமிழியலின் பல்வேறு பிரிவுகளைக் கொண்ட சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்திலுள்ள தமிழ் வளர் மையம் நடத்தி வருகின்றது. அவ்வரிசையில் முதன்முதலாக, பாரதியாரின் படைப்புகளை மட்டுமே மூலப்பாடமாகக் கொண்ட படிப்புகளைத் தமிழ் வளர் மையம் மூலமாக நடத்த திருவையாறில் இருபத்தைந்தாண்டுகளாக இயங்கி வரும் பாரதி இலக்கியப் பயிலகம் சார்பில், தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவனிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
பாரதியாரின் படைப்புகளிலான பாடத்திட்டங்களை மையமிட்டுச் சான்றிதழ் மற்றும் பட்டயப்படிப்புகளை நிகழ்த்திட வகை செய்யும் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) முனைவர் சி. தியாகராஜன், பாரதி இலக்கியப் பயிலக மைய இயக்குநர் முனைவர் கோ. விஜயராமலிங்கம் ஆகியோர் கையொப்பமிட்டனர். எதிர்வரும் ஜூன் முதல் இப்படிப்புகள் இணையவழியில் நடத்தப்பட உள்ளன என்று இந்நிகழ்விற்குத் தலைமையேற்ற துணைவேந்தர் பேராசிரியர் வி.திருவள்ளுவன் தெரிவித்தார். தமிழ் வளர் மைய இயக்குநர் முனைவர் இரா.குறிஞ்சிவேந்தன் ஒருங்கிணைத்தார். இந்நிகழ்வில் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் இரா.சு.முருகன், பாரதி அறக்கட்டளை நிர்வாகிகள் வழக்கறிஞர் பிரேமசாயி, குப்பு வீரமணி, சாமி சம்பத்குமார், கு.ரம்யா, குணா ரஞ்சன் மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழக அலுவல் நிலைப்பணியாளர் கார்த்திகேயன் ஆகியோர் பங்கேற்றனர்.